இங்கிலாந்து பவுலர்களை பந்தாடிய வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா- இந்திய முன்னாள் வீரர் பாராட்டு
- வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர்.
- இங்கிலாந்தில் இந்த அணி சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 669 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சைத் தொடங்கியது.
இதில் இந்திய அணி வீரர்கள் கேப்டன் சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சதமடித்தும், கேஎல் ராகுல் 90 ரன்களையும் சேர்த்தன் மூலம் கடைசி நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 425 ரன்களைச் சேர்த்தது.
இப்போட்டியின் கடைசி நாள் இறுதிவரையிலும் முடிவு எட்டப்படாததன் காரணமாக இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை திணறவைத்தனர். இதன் மூலம் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது பார்ட்னர்ஷிப்பை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து ஷிகர் தவான் கூறியதாவது:-
வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர். அதேபோல் கேப்டன் சுப்மன் கில்லும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்தில் இந்த அணி சிறப்பாக செயல்படுவதைப் பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது.
என்று பதிவிட்டுள்ளார்.