இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் சதம் விளாசிய கருண் நாயர்
- இந்திய ஏ அணியில் இடம் பிடித்த சர்ப்ராஸ் கான் 92 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- இந்திய ஏ அணி 300 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அதன்படி இந்த இந்திய ஏ அணியில் ஜெய்ஸ்வால், கருண் நாயர், அபிமன்யு ஈஸ்வரன், துருவ் ஜூரல், சர்துல் தாக்கூர், நிதீஷ்குமார் போன்ற வீரர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த ஆறு வீரர்களுமே இந்திய மெயின் அணியில் இடம்பெற்றிருக்க கூடியவர்கள்.
இவர்களை தவிர சர்பராஸ் கான், அன்சூல் காம்போஜ் போன்ற வீரர்கள் உள்ளனர். ருதுராஜ் இன்னும் காயம் சரியாகாததால் அவர் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.
இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 17 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 பந்தில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய ஏ அணி 51 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இதனையடுத்து கருண் நாயர் மற்றும் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சர்பராஸ் கான் 92 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கருண் நாயர் சதம் அடித்து அசத்தினார். பயிற்சி போட்டியில் சதம் அடித்ததால் அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என தெரிகிறது.