ஐபிஎல் டி20 லீக்: ஒவ்வொரு அணியும் தக்க வைத்துள்ள வீரர்கள் பட்டியல் 15ந்தேதி வெளியாகிறது
- ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறும் எனத் தகவல்.
- அதற்கு முன்னதாக வருகிற 15-ந்தேதி தக்கவைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலை அணிகள் வெளியிட உள்ளது.
ஐபிஎல் டி20 லீக்கின் ஒவ்வொரு சீசனுக்கும் முன்னதாக மினி ஏலம் நடைபெறும். அதற்கு முன்னதாக மெகா ஏலம், மினி ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களை அணிகள் தக்கவைத்துக் கொள்ளலாம். அதே சமயத்தில் தக்கவைத்துக் கொள்ள விரும்பாத வீரர்களை வெளியேற்றலாம்.
கடந்த முறை அந்த வீரர்களை எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுத்ததோ?, அந்த தொகை அணியின் மொத்த தொகையில் இருப்பு வைக்கப்படும். அந்த தொகையை வைத்து மினி ஏலத்தில் வீரர்களை வாங்கிக் கொள்ளலாம்.
கடந்த சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற்றது. இதில் பல வீரர்களை கோடிக்கணக்கில் அணிகள் போட்டி போட்டு எடுத்தன. ஆனால், 2025 சீசனில் சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர்களை வெளியிட திட்டமிட்டுள்ளன.
சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் டெல்லி அணி சில முக்கிய வீரர்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
சிஎஸ்கே அணி அஸ்வினை வெளியிட இருப்பதாக தகவல் கசிந்தது. இதற்கிடையே அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில்தான் வருகிற 15-ந்தேதி எந்தெந்த வீரர்களை அணிகள் தக்கவைத்துள்ளன என்ற பட்டியல் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. டிசம்பர் மாதம் 15-ந்தேதி மும்பையில் மினி ஏலம் நடைபெற வாய்ப்புள்ளது. ஆனால், பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தேதி அறிவிக்கவில்லை.