கிரிக்கெட் (Cricket)

சௌதியிடம் சிக்கிய ரோகித்.. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 16/1

Published On 2024-10-24 17:24 IST   |   Update On 2024-10-24 17:24:00 IST
  • இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனேவில் நடைபெறுகிறது.
  • வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை எடுத்தார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை துவங்கியது.

பூனேவில் நடைபெறும் இந்த போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் டாம் லேதம் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய டெவான் கான்வே 76 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்தவர்களில் ரச்சின் ரவீந்திரா 65 ரன்களையும், மிட்செல் சாண்ட்னர் 33 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி முதல் இன்னங்ஸில் 259 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 


இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுபுறம் ரவிச்சந்திரன் அஷ்வின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து இந்தியா தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதல் இரண்டு ஓவர்களில் இந்திய துவக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதும் எடுக்கவில்லை. முதல் இரண்டு ஓவர்கள் மெய்டென் ஆனது. மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இதனால் களமிறங்கிய சுப்மன் கில் நிதானமாக ஆடினார். ஆரம்பத்திலேயே இந்திய கேப்டன் டக் அவுட் ஆன நிலையில், ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி பொறுமையாக ஆடியது. இன்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 1 விக்கெட் இழப்புக்கு 16 ரன்களை எடுத்துள்ளது. 

Tags:    

Similar News