பாராட்டு கடிதம் எழுதிய பிரதமர் மோடி: நன்றி தெரிவித்த புஜாரா
- அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக புஜாரா சமீபத்தில் அறிவித்தார்.
- முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பை பாராட்டி வருகின்றனர்.
புதுடெல்லி:
இந்திய அணியின் நட்சத்திர வீரரான செதேஷ்வர் புஜாரா சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி புஜாராவுக்கு கடிதம் எழுதி பாராட்டினார். அதில் கூறியுள்ளதாவது:
நீங்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்ததை அறிந்தேன். உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறுகிய வடிவிலான கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் நீங்கள் நீண்ட வடிவிலான ஆட்டத்தின் அழகை நினைவூட்டினீர்கள்.
களத்தில் நீண்ட நேரம் பேட் செய்யும் திறன் பெற்ற நீங்கள், இந்திய பேட்டிங் வரிசையின் அச்சாணியாக திகழ்ந்தீர்கள். நீங்கள் களத்தில் இருக்கும் போது அணி பாதுகாப்பான நபரின் கையில் உள்ளது என ரசிகர்கள் உணர்ந்தனர்.
உங்கள் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை, குறிப்பாக வெளிநாட்டு சவாலான சூழ்நிலைகளில், அசாதாரண திறமையும் உறுதியும் கொண்ட தருணங்களால் நிறைந்துள்ளது.
உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க தொடர் வெற்றியைப் பெறுவதற்கு அடித்தளமாக இருந்த உங்கள் ஆட்டத்தை ரசிகர்கள் எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.
மிகவும் வலிமையான பந்துவீச்சு தாக்குதல்களுக்கு எதிராக நீங்கள் உறுதியாக நின்று, அணிக்காக பொறுப்பை ஏற்பது என்றால் என்ன என்பதை காட்டினீர்கள்.
ராஜ்கோட்டை கிரிக்கெட் வரைபடத்தில் இடம்பெறச் செய்த உங்கள் பங்களிப்பு, ஒவ்வொரு இளைஞருக்கும் பெருமையின் ஆதாரமாக இருக்கும்.
நீங்கள் கிரிக்கெட்டுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து, எழுச்சியடையும் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.உங்கள் எதிர்கால பயணத்திற்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் இருந்து பாராட்டு கடிதம் கிடைத்தமைக்கு பெருமை அடைகிறேன் என புஜாரா குறிப்பிட்டுள்ளார்.