நாய்க்கறி சாப்பிட்டு.., அப்ரிடி உடனான ஸ்லெட்ஜிங் குறித்து நினைவு கூர்ந்த இர்பான் பதான்..!
- 2006 பாகிஸ்தான் தொடரின்போது ஒரே விமானத்தில் பயணம் செய்தோம்.
- அப்போது அப்ரிடி என்னைப் பற்றி வெறுக்கத்தக்கும் வகையில் பேசினார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியின்போது இருநாட்டு வீரர்களும் களத்திற்குள் பயங்கரமாக மோதிக் கொள்வார்கள். அதிக அளவில் ஸ்லெட்ஜிங் நடைபெறும். இந்த ஸ்லெட்ஜிங் களத்திற்கும் வெளியிலும் சிலநேரம் நடைபெறும்.
கடந்த 2006ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது அப்ரிடிக்கும், தனக்கும் இடையில் ஸ்லெட்ஜிங் நடந்ததை இர்பான் பதான் நினைவு கூர்ந்துள்ளார்.
இது தொடர்பாக இர்பான் பதான் கூறியதாவது:-
2006ஆம் ஆண்டு தொடரின்போது இந்திய அணி வீரர்களும், பாகிஸ்தான் அணி வீரர்களும் ஒரே விமானத்தில் கராச்சியில் இருந்து லாகூர் பயணம் செய்தோம். அப்போது, அப்ரிடி என் அருகே வந்து, அவரது கையை என் தலையில் வைத்து, மசாஜ் செய்வதுபோன்று முடியை பிசைந்தார். அத்துடன் என்னிடம், குழந்தாய்..! எப்படி இருக்கிறாய்? எனக் கேட்டார். அப்போது நான், நீங்கள் எப்போது என் தந்தையானீர்கள்? என்று கேட்டேன்.
இந்த குழந்தைத்தனமாக பழக்கவழக்கம் அவருடையதுதான். அவர் என்னுடைய நண்பர் கிடையாது. அதன்பின், வெறுக்கத்தக்க சில வார்த்தைகள் என்னை பற்றிக் கூறினார். அவருடைய இருக்கை எனது இருக்கைக்கு வலது பக்கமாக இருந்தது.
அப்துல் ரசாக் எனக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார். என்ன வகையான இறைச்சிகள் இங்கே (பாகிஸ்தான்) கிடைக்கும் என அப்துல் ரசாக்கிடம் கேட்டேன். அதற்கு அவர், பலவகையான இறைச்சிகள் கிடைக்கும் என பதில் சொன்னார். நான் அவரிடம், நாய்க்கறி கிடைக்குமா? என்று கேட்டேன்.
இதனால் ரசாக் அதிர்ச்சி அடைந்தார். அதன்பின், பதான் ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேட்டார். அப்போது நான் சிறிதும் தயங்காமல் அப்ரிடி நாய்க்கறி சாப்பிட்டுவிட்டார். அவர் நீண்ட காலமாக குறைத்துக் கொண்டிருக்கிறார் எனக் கூறினேன்.
அதன்பின் அப்ரிடியால் ஒன்னும் சொல்ல முடியவில்லை. அவர் ஏதாவது சொல்லியிருந்தால் நான், பாருங்கள் மீண்டும் குறைத்துக் கொண்டிருக்கிறார் எனச் சொல்லியிருப்பேன். அதன்பின் விமானம் தரையிறங்கும் வரை அப்ரிடி அமைதியாக இருந்தார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, வார்த்தைப் போரில் என்னை வெல்ல முடியாது என்று அவருக்கு புரிந்திருக்கும். அதன்பின் ஒருபோதும் அவர் என்னிடம் ஏதும் சொன்னதில்லை.
இவ்வாறு இர்பான் பதான் நினைவு கூர்ந்துள்ளார்.