அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி
- வங்கதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 587 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
- அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டாக்கா:
வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் கடந்த 11-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்டெர்லிங் 60 ரன்கள் சேர்த்தார்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேசம் 8 விக்கெட்டுக்கு 587 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஹசன் ஜாய் அதிகபட்சமாக 171 ரன்கள்எடுத்தார். ஷாண்டோ சதமடித்து அவுட்டானார்.
இதையடுத்து, 301 ரன்கள் பின்தங்கிய நிலையில் அயர்லாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து அணி விரைவில் விக்கெட்களை இழந்தது. மூன்றாம் நாள் முடிவில் அயர்லாந்து 5 விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. ஆண்டி மெக்பிரின் அரை சதம் கடந்து 52 ரன்னும், கேப்டன் ஆண்ட்ரூ பால்பெரின் 38 ரன்னும், ஜோர்டான் நெயில் 36 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், அயர்லாந்து அணி 2வது இன்னிங்சில் 254 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வங்கதேசம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.