ஒரு வருடத்திற்கு மேலாக விளையாடாத சுப்மன் கில்: துணைக் கேப்டன் பதவி கிடைத்தது எப்படி?- பரபரப்பு தகவல்
- எதிர்காலத்தில் கருத்தில் கொண்டு சுப்மன் கில்லை வளர்க்க வேண்டும் என கம்பீர் வலியுறுத்தியதாக தகவல்.
- சுப்மன் கில்லை தவிர்த்து மற்ற வீரர்களை கண்டுபிடிக்க முடியாததால், தேர்வுக்குழு இந்த முடிவுக்கு வந்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய டி20 அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அடுத்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், ஐபிஎல் தொடரில் அசத்திய ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே சுப்மன் கில்லும் அணியில் இடம் பெறலாம். மாற்று தொடக்க வீரர் இடத்திற்கு ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுப்மன் கில் அணியில் இடம் பிடித்ததுடன், துணைக் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அக்சர் பட்டேல் துணைக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற நிலையில், சுப்மன் கில்லிடம் சென்றுள்ளது.
அணியில் இடம் கிடைக்குமா? என்ற எதிர்பார்த்த நிலையில் துணைக் கேப்டன் பதவி எப்படி சென்றது என்பது கேள்விக்குறியாக இருந்த நிலையில், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கவுதம் கம்பீர்தான் சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவி வழங்க வேண்டும் என வற்புறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலில் அக்சர் பட்டேலைத்தான் துணைக் கேப்டனாக நியமிக்க அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. சுப்மன் கில் பெயர் அவர்கள் மனதில் இல்லையாம்.
ஆன்லைன் மூலம் கவுதம் கம்பீர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அப்போது சுப்மன் கில்லுக்கு அடுத்த மாதம் வந்தால் 26 வயது நிறைவடைகிறது. இந்தியாவின் எதிர்காலத்திற்கு யாராவது ஒருவரை வளர்ப்பது அவசியம். அதற்கு கில் தகுந்த நபராக இருப்பார். அவரால் நீண்ட காலத்திற்கு விளையாட முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றுள்ளது. சுப்மன் கில்லை தவிர்த்து சரியான நபரை தேர்வுக்குழுவால் கண்டுபிடிக்க முடியவில்லை. சூர்யகுமாரிடம் இருந்து கேப்டன் பதவியை பெறுவதற்கு தயாராக இது சரியான நேரம் என்று தேர்வுக்குழு கருதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால்தான் சுப்மன் கில்லுக்கு துணைக் கேப்டன் பதவி சென்றுள்ளது. சுப்மன் கில் கடந்த வருடம் ஜூலை மாதத்திற்குப் பிறகு டி20 கிரிக்கெட்டில் விளையாடியது கிடையாது. ஒருநாள் போட்டி அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வருகிறார். டெஸ்ட் அணியில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.