2வது போட்டியிலும் வெற்றி: ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
- முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 19.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- ஆப்கானிஸ்தான் 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஹராரே:
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் போட்டியை ஜிம்பாப்வே வென்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 ஆட்டத்தில் 53 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 19.3 ஓவரில் 125 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் சிக்கந்தர் ரசா 37 ரன்னில் அவுட் ஆனார்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷித் கான் 3 விக்கெட்டும், முஜிப் உர் ரகுமான், அஹமத்சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஜட்ரன் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து அணியை வெற்றிபெற வைத்தார்.
இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன் டி 20 தொடரை கைப்பற்றியது.