ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்: 3 கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலி
- ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது.
- கிரிக்கெட் விளையாடி விட்டு சொந்த ஊருக்கு திரும்பும் போது 3 வீரர்கள் பலியாகி உள்ளனர்.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தலிபான் அமைப்பு, பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது.
இதற்கிடையே தெக்ரிக்-இ-தலிபான் அமைப்பினரை குறிவைத்து ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் வான்வழித்தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம், பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, ராக்கெட் குண்டுகளை வீசினார்கள். இதையடுத்து இரு நாட்டு ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் பலியானார்கள்.
இதற்கிடையே கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலையீட்டால் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.
உயிரிழந்த கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கத்துல்லா, ஹாரூன் என்பது தெரிய வந்தது. உள்ளூர் கிரிக்கெட் வீரர்களான இவர்கள் நட்புப் போட்டியில் பங்கேற்க உர்குனிலிருந்து பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பாக்டிகா மாகாணத்தின் ஷரானாவுக்குச் சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது பாகிஸ்தானின் தாக்குதலில் சிக்கி பலியாகி உள்ளனர்.