விளையாட்டு

கேல் ரத்னா விருதில் குழப்பம்: அர்ஜூனா விருது பரிந்துரையில் கிரிக்கெட் வீரர்கள் இல்லை

Published On 2025-12-25 11:46 IST   |   Update On 2025-12-25 11:46:00 IST
  • அர்ஜூனா விருதுக்கான பரிந்துரையில் 24 பேர் இடம்பெற்றுள்ளனர்.
  • இதில் கிரிக்கெட்டை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.

புதுடெல்லி:

விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மேயர் தயான்சந்த் கேல்ரத்னா விருது மற்றும் அர்ஜூனா விருதுகளை வழங்கி வருகிறது.

விளையாட்டுத் துறையில் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதுக்கு இந்திய ஹாக்கி அணியின் துணை கேப்டனான ஹர்திக் சிங் பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதே நேரத்தில் கேல் ரத்னா விருது யாருக்கும் இல்லை என்று மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. கேப்டன் ஹர்மன் பிரீத் கவூர், ஸ்மிருதி மந்தனா மற்றும் இரட்டை ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய ஹாக்கி அணி துணை கேப்டன் ஹர்திக் சிங் ஆகிய 3 பேரது பெயர்கள் விவாதிக்கப்பட்டது. இறுதியில் யாருக்கும் இந்த ஆண்டு கேல் ரத்னா விருது வழங்க வேண்டாம் என்று தேர்வு செய்யும் குழு ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

1991-ம் ஆண்டு கேல் ரத்னா விருது அறிமுகம் செய்யப்பட்டது. செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் முதல் விருதை பெற்றார். 2008, 2014 ஆகிய 2 முறை கேல் ரத்னா விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு டி.குகேஷ் (செஸ்), ஹர்மன் பிரீத் சிங் (ஹாக்கி), பிரவீன் குமார் (பாரா தடகளம்), மனுபாக்கர் (துப்பாக்கி சுடுதல்) ஆகிய 4 பேருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

அர்ஜூனா விருதுக்கான பரிந்துரையில் 24 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் கிரிக்கெட்டை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை. தொடர்ந்து 2-வது ஆண்டாக அர்ஜூனா விருது பட்டியலில் கிரிக்கெட் வீரர்கள் இடம்பெறவில்லை.

கிரிக்கெட் வீராங்கனைகளில் முன்னாள் கேப்டனான மிதாலிராஜ் (2021) மட்டுமே அர்ஜூனா விருதை பெற்று இருந்தார். கிரிக்கெட் வீரர்களில் டெண்டுல்கர் (1997-98), டோனி (2007), விராட்கோலி (2018), ரோகித் சர்மா (2019) ஆகியோர் கேல் ரத்னா விருதை பெற்று இருந்தனர்.

Tags:    

Similar News