விளையாட்டு
null

உலக பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு- இந்திய ஜோடி அரை இறுதிக்கு தகுதி

Published On 2022-08-26 05:54 GMT   |   Update On 2022-08-26 07:04 GMT
  • உலக சாம்பியனான ஜப்பான் ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி அசத்தியது.
  • சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.

டோக்கியோ:

உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று கால் இறுதி ஆட்டங்கள் நடந்தது. ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன்-துருவ் கபிலா ஜோடி இந்தோனேசியாவின் முகமது ஹசன்-ஹந்திரா செடியவான் ஜோடியுடன் மோதியது.

இதில் இந்திய ஜோடி 8-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. மற்றொரு கால் இறுதியில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி ஜப்பான் ஜோடியான கோபயாஷி-ஹோக்கியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

இதில் முதல் செட்டை இந்திய ஜோடி 24-22 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2-வது செட்டை ஜப்பான் ஜோடி தனதாக்கியது.

இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை கைப்பற்ற இரு ஜோடிகளும் போராடினர். இதில் இந்திய ஜோடியின் கை ஓங்கியது.

அந்த செட்டை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதன் மூலம் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. உலக சாம்பியனான ஜப்பான் ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி அசத்தியது.

அரை இறுதிக்கு தகுதி பெற்றதால் இந்திய ஜோடி பதக்கத்தை உறுதி செய்தது. இதன் மூலம் உலக பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சாத்விக் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி உறுதிசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News