விளையாட்டு
சஞ்சு சாம்சன் - டு பெலிஸ்சிஸ்

இறுதிப்போட்டியில் குஜராத்துடன் மோதுவது யார்? ராஜஸ்தான்-பெங்களூரு இன்று பலப்பரீட்சை

Published On 2022-05-27 06:46 GMT   |   Update On 2022-05-27 06:46 GMT
இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்- டு பெலிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
அகமதாத்த்: 

15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தை எட்டி இருக்கிறது. இத்தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்றில் ராஜஸ்தானை தோற்கடித்து குஜராத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெளியேற்றுதல் சுற்றில் லக்னோவை பெங்க ளூரு அணி தோற்கடித்தது.

இறுதிப்போட்டிக்குள் நுழைவது யார் என்பதை நிர்ணயிக்கும் 2-வது தகுதிச் சுற்று போட்டி இன்று இரவு அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்- டுபெலிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் 2-வது இடத்தை பிடித்ததால் இறுதிப் போட்டிக்கான முதல் சுற்றில் தோற்றாலும், இன்னொரு வாய்ப்பாக 2-வது தகுதிச்சுற்றில் விளையாடுகிறது. இதனை பயன்படுத்தி அந்த அணி வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது.

ராஜஸ்தான் அணியில் ஜோஸ்பட்லர், தேவ்தத் படிக்கல், சாம்சன், ஹெட்மயர் ஆகியோர் பேட்டிங்கில் உள்ளனர். பந்துவீச்சில் சாகல், அஸ்வின், போல்ட், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.

பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. அந்த அணி பேட்டிங்கில் விராட்கோலி, ரஜத் படிதார், மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் ஹேசல்வுட், ஹசரங்கா, ஹர்சல் பட்டேல் ஆகியோர் உள்ளனர்.

வெளியேற்றுதல் சுற்று போட்டியில் ரஜத் படிதார் சதம் அடித்தார். இதன் மூலம் பெங்களூரு அணி பேட்டிங் வரிசை பலம் பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு நுழையும் முனைப்பில் பெங்களூரு உள்ளது. அந்த அணி இதுவரை 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் கோப்பையை வெல்லவில்லை.

இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
Tags:    

Similar News