விளையாட்டு
அலெக்சாண்டர் ஸ்வெரேவ்

ஜெர்மனி டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு 8 வாரம் தடை

Published On 2022-03-09 11:33 IST   |   Update On 2022-03-09 11:33:00 IST
ஜெர்மனி டென்னிஸ் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு 8 வார கால தடையும், கூடுதலாக ரூ.19 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்:

உலக டென்னிஸ் தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவரும், ஒலிம்பிக் சாம்பியனுமான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) கடந்த மாதம் மெக்சிகோவில் நடந்த அகபுல்கோ ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று விளையாடிய போது சர்ச்சையில் சிக்கினார். இரட்டையர் பிரிவில் பிரேசிலின் மார்செலோ மெலோவுடன் இணைந்து ஆடிய அவர் முதலாவது சுற்றில் லாயிட் கிளாஸ்பூல் (இங்கிலாந்து)- ஹெலியாவாரா (பின்லாந்து) இணையிடம் போராடி தோல்வியை தழுவினார். 

இந்த ஆட்டத்தின் போது சில புள்ளிகளை நடுவர் எதிர் ஜோடிக்கு வழங்கிய போது ஆட்சேபித்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இறுதியில் நடுவரை அச்சுறுத்தும் விதமாக அவர் அமர்ந்திருந்த சேர் மீது 4 முறை டென்னிஸ் பேட்டால் ஆவேசமாக ஓங்கி அடித்தார். அவரது செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் அந்த போட்டியின் ஒற்றையர் பிரிவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இது குறித்து ஆண்கள் டென்னிஸ் சம்மேளனம் விசாரணை நடத்தியது. இதன் முடிவில் 24 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு 8 வார கால தடையும், கூடுதலாக ரூ.19 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஓராண்டு காலம் அவரது நடத்தை தீவிரமாக கண்காணிக்கப்படும். இந்த காலக்கட்டத்தில் அவர் ஏதாவது தவறு செய்தால் கடும் தண்டனைக்குள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News