விளையாட்டு
இந்தியா-ஜெர்மனி ஆட்டம் தள்ளிவைப்பு

புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஜெர்மனி ஆட்டம் தள்ளிவைப்பு

Published On 2022-03-09 09:55 IST   |   Update On 2022-03-09 09:55:00 IST
இந்தியா-ஜெர்மனி பெண்கள் அணிகள் இடையிலான இரண்டு லீக் ஆட்டங்கள் திட்டமிட்டபடி புவனேஸ்வரில் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவனேஸ்வர்:

9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான இரண்டு லீக் ஆட்டங்கள் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் நடக்க இருந்தது. இந்த நிலையில் ஜெர்மனி அணியின் வீரர்கள் பலர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜெர்மனி அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான இந்த இரண்டு ஆட்டமும் தள்ளிவைக்கப்படுவதாக சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்த போட்டியை நடத்துவதற்கான மாற்று தேதியை முடிவு செய்யும் பணியை இந்தியா மற்றும் ஜெர்மனி ஆக்கி சம்மேளனங்கள் இணைந்து செய்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதே சமயம் இந்தியா-ஜெர்மனி பெண்கள் அணிகள் இடையிலான இரண்டு லீக் ஆட்டங்கள் திட்டமிட்டபடி புவனேஸ்வரில் வருகிற 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக ஜெர்மனி பெண்கள் அணி நேற்று இந்தியா வந்தடைந்தது.

Similar News