விளையாட்டு
ரோகித் சர்மா - மாலிக்

20 ஓவர் போட்டியில் ரோகித்சர்மா புதிய சாதனை- சோயிப் மாலிக்கை முந்தினார்

Published On 2022-02-28 10:48 IST   |   Update On 2022-02-28 10:48:00 IST
20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்தது.
தர்மசாலா:

இலங்கைக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.

தர்மசாலாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியாவுக்கு 147 ரன் இலக்காக இருந்தது.

கேப்டன் தசுன் ‌ஷனகா அதிகபட்சமாக 38 பந்தில் 74 ரன் (9 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். அவேஷ்கான் 2 விக்கெட்டும் , முகமது சிராஜ் , ஹர்சல் படேல், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய இந்திய அணி 19 பந்துகள் எஞ்சியிருந்த நிலையில் 16.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்ரேயாஸ் அய்யர் 45 பந்தில் 73 ரன்னும் (9 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 15 பந்தில் 22 ரன்னும் ( 3 பவுண்டரி ) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி 20 ஓவர் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 62 ரன் வித்தியாசத்திலும், தர்மசாலாவில் நடந்த 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியின் சாதனையை சமன் செய்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அபுதாபியில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை 66 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதன் பிறகு ஸ்காட்லாந்து, நமீபியா அணிகளையும், அதைத்தொடர்ந்து நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளை தலா 3 முறையும் வீழ்த்தியது.

ஆப்கானிஸ்தான் அணியும் தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்று உள்ளது. ஆப்கானிஸ்தான் சாதனையை தற்போது இந்தியா சமன் செய்து உள்ளது. இன்னும் ஒரு 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா புதிய சாதனை படைக்கும்.

அதிக 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாடி இந்திய கேப்டன் ரோகித்சர்மா புதிய சாதனை படைத்தார்.

நேற்றைய ஆட்டம் அவருக்கு 125-வது போட்டியாகும். இதன்மூலம் அதிக போட்டியில் விளையாடி இருந்த பாகிஸ்தானை சேர்ந்த சோயிப் மாலிக்கை ரோகித்சர்மா முறியடித்தார். சோயிப் மாலிக் 124 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ரோகித்சர்மா 125 போட்டியில் 3313 ரன்னும், சோயிப் மாலிக் 124 போட்டியில் 2345 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து இந்தியா- இலங்கை அணியினரிடையே 2 டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 4-ந் தேதி மொகாலியில் தொடங்குகிறது. 

Similar News