விளையாட்டு
பாகிஸ்தான் சூப்பர் லீக் - முல்தானை வீழ்த்தி லாகூர் அணி சாம்பியன் பட்டம் வென்றது
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் லாகூர் குவாலண்டர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
லாகூர்:
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மொகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ், ஷஹீன் அப்ரிடி தலைமையிலான லாகூர் குவாலண்டர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லாகூர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த லாகூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. முகமது ஹபீஸ் 46 பந்துகளில் 1 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 69 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய புரூக் 22 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 41 ரன்னும், வெய்ஸ் 8 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 28 ரன்னும் எடுத்தனர்.
முல்தான் அணி சார்பில் ஆசிப் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் முல்தான் அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அந்த அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. முல்தான் அணியில் குஷ்தில் ஷா அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார்.
லாகூர் அணி சார்பில் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டும், ஹபீஸ், சமான் கான் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் லாகூர் குவாலண்டர்ஸ் அணி முதல் முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
முகமது ஹபீஸ் ஆட்ட நாயகன் விருதையும், முகமது ரிஸ்வான் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.