விளையாட்டு
கடைசி டி20 போட்டியிலும் அசத்தல் வெற்றி- இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா
இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் 45 பந்துகளில் 9 பவுண்டரி 1 ஒரு சிக்சருடன் 73 ரன்கள் குவித்தார்.
தரம்சாலா:
இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் சனகா 74 ரன்கள் குவித்தார். சண்டிமல் 22 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 2வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. கேப்டன் ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் சஞ்சு சாம்சன் (18 ரன்கள்), தீபக் ஹூடா (21 ரன்கள்), வெங்கடேஷ் அய்யர் (5 ரன்கள்) ஆகியோரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதேசமயம் மறுமுனையில் அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் கடந்தார். அவருடன் ஜடேஜா தனது பங்களிப்பை வழங்க, இந்தியா 19 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. ஸ்ரேயாஸ் அய்யர் 45 பந்துகளில் 9 பவுண்டரி 1 ஒரு சிக்சருடன் 73 ரன்கள் (நாட் அவுட்), ஜடேஜா 15 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 22 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தனர்.
16.5 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.