விளையாட்டு
புரோ ஆக்கி லீக்கில் ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணிகள் வெற்றி
புரோ ஆக்கி லீக் தொடரில் இந்திய ஆண்கள், பெண்கள் அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இந்த போட்டி தொடரில் இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக ருசித்த 3-வது வெற்றி இதுவாகும்.
புவனேஸ்வர்:
9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. மாலையில் நடந்த பெண்கள் பிரிவு லீக் ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. ஸ்பெயின் அணியில் செகு மார்டா 18-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்திய தரப்பில் ஜோதி 20-வது நிமிடத்திலும், நேஹா 52-வது நிமிடத்திலும் கோல் திருப்பினர். இந்த போட்டி தொடரில் இந்திய பெண்கள் அணி தொடர்ச்சியாக ருசித்த 3-வது வெற்றி இதுவாகும். இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி மீண்டும் ஸ்பெயினுடன் (மாலை 5 மணி) மோதுகிறது.
இரவில் நடந்த ஆண்கள் பிரிவு ஆட்டத்தில் இந்தியா-ஸ்பெயின் அணிகள் மல்லுக்கட்டின. இதில் ஒரு கட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் பின்தங்கிய இந்தியா அதன் பிறகு ஆக்ரோஷமாக விளையாடி எழுச்சி பெற்றது. கடைசி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பை பயன்படுத்தி ஹர்மன்பிரீத் சிங் அடித்த கோல் மூலம் இந்தியா 5-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை சாய்த்தது. ஸ்பெயின் கேப்டன் மார்க் மிராலஸ் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தும் அந்த அணிக்கு பலன் இல்லை. இந்த தொடரில் 5-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியாவுக்கு இது 4-வது வெற்றியாகும். இவ்விரு அணிகளும் இதே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு மறுபடியும் சந்திக்கின்றன.