விளையாட்டு
இஷான் கிஷான் - ரோகித் சர்மா

இலங்கைக்கு எதிராக இந்தியா வெற்றி: இஷான் கி‌ஷனுக்கு ரோகித் சர்மா பாராட்டு

Published On 2022-02-25 10:17 IST   |   Update On 2022-02-25 10:17:00 IST
ஜடேஜாவை டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பயன்படுத்த விரும்புகிறோம் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
லக்னோ:

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரின் முதல் ஆட்டம் நேற்று லக்னோவில் நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 199 ரன் குவித்தது. இஷான்கி‌ஷன் 56 பந்தில் 89 ரன் எடுத்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 57 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 44 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுத்தது. இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அசலங்கா 53 ரன் எடுத்தார். இந்திய தரப்பில் புவனேஸ்வர்குமார், வெங்டேஷ் அய்யர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

இஷான்கி‌ஷனின் மன நிலையும், திறமையும் எனக்கு தெரியும். அவர் பேட்டிங் செய்ததை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 6 ஓவர்களுக்கு பிறகு அவர் நல்ல அடித்தளத்தை உருவாக்கினார். அது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் இடைவெளிகளை கண்டறிந்து பந்துகளை விளாசினார்.

ஜடேஜா மீண்டும் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவரிடம் இருந்து இன்னும் அதிகமானவற்றை நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான் அவரை முன்னதாகவே பேட்டிங் செய்ய அனுப்பினோம்.

வர இருக்கும் போட்டிகளில் இனி அதை நீங்கள் பார்க்கலாம். அவர் நல்ல பார்மில் இருக்கிறார். குறிப்பாக அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பயன்படுத்த விரும்புகிறோம்.

பெரிய மைதானங்களில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அங்குதான் நீங்கள் பேட்ஸ்மேனாக சோதிக்கப்படுகிறீர்கள்.

நாங்கள் சில கேட்ச்களை கைவிட்டோம். எங்களது பீல்டிங் பயிற்சியாளருக்கு சில வேலைகள் உள்ளன என்று நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

2-வது 20 ஓவர் போட்டி நாளை தர்மசாலாவில் நடக்கிறது.

Similar News