விளையாட்டு
டிராவிஸ் ஹெட்

பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியா 425 ரன்கள் குவிப்பு: இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா?

Published On 2021-12-10 07:40 IST   |   Update On 2021-12-10 07:40:00 IST
டேவிட் வார்னர் சதத்தை தவறவிட, டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி 152 ரன்கள் விளாசியதால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில 425 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து பேட் கம்மின்ஸின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 147 ரன்னில் சுருண்டது. கம்மின்ஸ் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார்.

பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 94 ரன்னில் வெளியேறினார். மார்னஸ் லாபஸ்சேன் 74 ரன்கள் சேர்த்தார்.

ஸ்டீவ் ஸ்மித் 12 ரன்னில் ஏமாற்றம் அளித்தாலும், டிராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 112 ரன்களுடனும், மிட்செல் ஸ்டார்க் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடி டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் விளாசினார். ஸ்டார்க் 35 ரன்கள் அடித்தார். இதனால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 104.3 ஓவர்களில் விளையாடி 425 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஓலி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 278 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது. 278 ரன்களை கடந்தால்தான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க முடியும் என்பதால், 2-வது இன்னிங்சில் மிகப்பெரிய ஸ்கோரை எதிர்பார்த்து விளையாடி வருகிறது.

Similar News