விளையாட்டு
அஸ்வின்

இரு நாடுகள் தொடரில் அதிக விக்கெட் - ஹேட்லி சாதனையை அஸ்வின் சமன் செய்தார்

Published On 2021-12-06 06:50 GMT   |   Update On 2021-12-06 08:24 GMT
இரு நாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே முதல் டெஸ்ட் தொடர் 1956-ம் ஆண்டு நடைபெற்றது. இதுவரை 23 தொடர் முடிந்து உள்ளது.

இரு நாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றி இருந்தார். அவர் 14 டெஸ்டில் 24 இன்னிங்சில் 65 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தார்.

ஹேட்லியின் இந்த சாதனையை அஸ்வின் இன்று முறியடித்தார். மும்பை டெஸ்டில் 2-வது இன்னிங்சில் அவர் 4 விக்கெட் கைப்பற்றினார். நிகோலசை அவுட் செய்ததன் மூலம் அவர் இந்த சாதனையை முறியடித்தார்.

அஸ்வின் 9 டெஸ்டில் 17 இன்னிங்சில் 66 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். 59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.

இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் அஸ்வின் 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார். கான்பூரில் நடந்த முதல் டெஸ்டில் 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

அஸ்வின் முதல் இடத்திலும், ஹேட்லி 2-வது இடத்திலும் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக பி‌ஷன் சிங் பெடி 57 விக்கெட்டும், பிரசன்னா 55 விக்கெட்டும், சவுத்தி 52 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

மேலும் இந்த ஆண்டில் அஸ்வின் 50 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்து உள்ளார். அவர் 4-வது முறையாக ஒரு ஆண்டில் 50 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார். இதற்கு முன்பு 2015, 2016, 2017-ல் 50 விக்கெட்டுக்குமேல் எடுத்து இருந்தார்.

இதன் மூலம் அவர் புதிய சாதனை புரிந்தார். இதற்கு முன்பு கும்ப்ளேயும் (1999, 2004, 2006), ஹர்பஜன்சிங்கும் (2001, 2002, 2008) தலா 3 முறை 50 விக்கெட்டுக்கு மேல் எடுத்து இருந்தனர். அவர்களது சாதனையை அஸ்வின் முறியடித்தார்.

Tags:    

Similar News