செய்திகள்
ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்

ஆப்கானிஸ்தான்-ஸ்காட்லாந்து அணிகள் இன்று மோதல்

Published On 2021-10-25 05:46 GMT   |   Update On 2021-10-25 05:46 GMT
டி20 உலகக்கோப்பை போட்டியில் முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி இன்று ஸ்காட்லாந்து அணியுடன் மோதுகிறது.
சார்ஜா:

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ‘சூப்பர்-12’ சுற்றில் இன்று (திங்கட்கிழமை) இரவு சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஸ்காட்லாந்தை (குரூப்-2) எதிர்கொள்கிறது. நேரடியாக ‘சூப்பர்-12’ சுற்றுக்கு தகுதி பெற்ற முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது. 

அடுத்த பயிற்சி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீசை வீழ்த்தியது. ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான ரஷித் கான், முகமது நபி, முஜீப் ஜட்ரன் ஆகியோர் தங்களது மாயாஜால பந்து வீச்சு மூலம் எதிரணியினருக்கு நெருக்கடி அளிக்கக்கூடியவர்கள். மெதுவான தன்மை கொண்ட சார்ஜா ஆடுகளத்தில் அவர்களது பந்து வீச்சு நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்கு குடைச்சல் கொடுக்கும். பேட்டிங்கில் அந்த அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஜரத்துல்லா ஜஜாய், முகமது ஷஜாத் ஆகியோரை தான் அதிகம் நம்பி இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களும் சிறப்பாக செயல்பட்டால் அந்த நாளில் அவர்கள் எந்த அணிக்கும் சிம்மசொப்பணமாக விளங்குவார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.

முதல் சுற்றில் ‘பி’ பிரிவில் இடம் பிடித்து இருந்த கைல் கோட்ஸர் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி லீக் ஆட்டங்களில் வங்காளதேசம், பப்புவா நியூ கினியா, ஓமன் ஆகிய அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தி தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து ‘சூப்பர்-12’ சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. இதனால் ஸ்காட்லாந்து அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். பேட்டிங்கில் கைல் கோட்ஸர், ஜார்ஜ் முன்சி, கிறிஸ் கிரீவ்ஸ் ஆகியோரும், பவுலிங்கில் வேகப்பந்து வீச்சாளர்கள் பிரட்லி வீல், ஜோஷ் டேவி, சுழற்பந்து வீச்சாளர் மார்க் வாட் ஆகியோரும் அந்த அணிக்கு வலுசேர்க்கிறார்கள். சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் 6 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 6 தடவையும் ஆப்கானிஸ்தான் அணியே வெற்றி கண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால் எழுந்த குழப்பம் காரணமாக போதிய தயார்படுத்துதல் இல்லாமல் களம் காணும் ஆப்கானிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளிக்க ஸ்காட்லாந்து தீவிரம் காட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
Tags:    

Similar News