செய்திகள்
கேஎல் ராகுல்

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு- இந்திய வீரர் ராகுலுக்கு அபராதம்

Published On 2021-09-06 10:24 GMT   |   Update On 2021-09-06 10:28 GMT
ஓவல் டெஸ்ட் போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஓவல்:

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் இந்தியா 466 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 368 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

368 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடிய இங்கிலாந்து நேற்றைய 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன் எடுத்து இருந்தது.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இங்கிலாந்து வெற்றிக்கு மேலும் 291 ரன் தேவை. கைவசம் 10 விக்கெட் உள்ளது.

இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியா இந்த டெஸ்டில் வெற்றி பெறுமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி எஞ்சிய ரன்களை எடுத்து வெற்றி பெற முயற்சிக்கும். இதனால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தில் உள்ளது.

வெற்றி பெறும் அணி இந்த டெஸ்ட் தொடரில் முன்னிலை பெறும். 5 டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2-வது டெஸ்டில் இந்தியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றது.

ஓவல் டெஸ்ட் போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

3-வது நாள் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் 46 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆண்டர்சன் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவ் கேட்ச் பிடித்தார். நடுவர் இதற்கு அவுட் கொடுக்கவில்லை. இங்கிலாந்து டி.ஆர்.எஸ்.சுக்கு சென்றது. டெலிவி‌ஷன் மூலம் ராகுல் பேட்டில் பந்து பட்டு கேட்ச் ஆகியிருந்தது தெரிய வந்தது. டி.ஆர்.எஸ். மூலம் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது.

ஆனால் ராகுல் மைதானத்தை விட்டு உடனே வெளியே செல்லாமல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து வீரர்களின் நடத்தை விதிகளை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. போட்டியில் இருந்து பெறும் பணத்தில் 15 சதவீதம் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ராகுலின் ஒழுக்க நடவடிக்கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags:    

Similar News