செய்திகள்
விறுவிறுப்பான கட்டத்தில் ஓவல் டெஸ்ட்- இந்தியா 230 ரன்கள் முன்னிலை
ஓவல் டெஸ்ட் கிரிக்கெட்டின் 4-வது நாள் ஆட்டத்தின்போது கேப்டன் விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஓவல்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 290 ரன் எடுத்தது. பின்னர் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் சிறப்பான துவக்கம் அளித்தனர். இந்த ஜோடி 83 ரன்கள் எடுத்த நிலையில், ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா சதம் அடித்தார். வெளிநாட்டு மண்ணில் அவரது முதல் செஞ்சுரி இதுவாகும். தொடர்ந்து ஆடிய அவர் 127 ரன்னில் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய புஜாரா 61 ரன்களில் அவுட் ஆனார். இதனால் 3ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்திருந்தது. கேப்டன் வீராட் கோலி 22 ரன்னும், ஜடேஜா 9 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. நிதானமாக ஆடிய ஜடேஜா 14 ரன்களிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் 4 ரன்களிலும் வோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கோலி 44 ரன்களில் வெளியேறினார். உணவு இடைவேளையின்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷப் பண்ட் 16 ரன்களுடனும், ஷர்துல் தாகூர் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்தைவிட இந்தியா 230 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.