செய்திகள்
அரங்கமே அதிர்ந்தது... ஓவல் டெஸ்டில் சதம் அடித்து அசத்திய ரோகித்
ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா, 205 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் சதம் அடித்தார்.
ஓவல்:
இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்களும், இங்கிலாந்து அணி 290 ரன்களும் அடித்தன.
இதையடுத்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 20 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று 3வது நாள் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தொடர்ந்து ஆடிய கே.எல்.ராகுல் 46 ரன்களில் ஆட்டமிழக்க, ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். 205 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இந்த இலக்கை அவர் எட்டினார். இதன்மூலம் வெளிநாட்டில் முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். அப்போது ரசிகர்கள் கைதட்டி அவரை உற்சாகப்படுத்தினர். மறுமுனையில் புஜாரா அரை சதத்தை நெருங்கினார்.