செய்திகள்
ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் நாளை தொடக்கம்: ஜோகோவிச் வரலாற்றுச் சாதனை படைப்பாரா?

Published On 2021-08-29 12:28 IST   |   Update On 2021-08-29 12:28:00 IST
அமெரிக்க ஓபனை வென்றால் ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட் ஸ்லாம் பட்டங்கனை வென்ற ஒரே வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜோகோவிச் படைப்பார்.
இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நாளை (30-ந்தேதி) தொடங்குகிறது. செப்டம்பர் 12-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) இந்த போட்டியில் பட்டம் வென்று புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டென்னிசின் மும்மூர்த்திகளான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபேல் நடால் (ஸ்பெயின்) மற்றும் 34 வயதான ஜோகோவிச் ஆகியோர் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று முதல் இடத்தில் உள்ளனர். இதில் ஜோகோவிச் 21-வது கிராண்ட் ஸ்லாமை கைப்பற்றி அதிக பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைக்க வாய்ப்பு இருக்கிறது.

ஏனென்றால் முன்னணி வீரர்களான நடால், பெடரர், நடப்பு சாம்பியன் டொமினிக் தீம் (ஆஸ்திரியா) ஆகியோர் காயம் காரணமாக அமெரிக்க ஓபனில் ஆடவில்லை.

ஜோகோவிச் இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் ஆகிய கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்றுள்ளார். தற்போது அமெரிக்க ஓபனிலும் வெற்றி பெற்றால் ஒரே ஆண்டில் 4 கிராண்ட் ஸ்லாமையும் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

பெடரர், நடால் போன்ற முன்னணி வீரர்கள் சாதிக்காததை ஜோகோவிச் சாதிக்க நல்ல வாய்ப்பு உள்ளது. ஜோகோவிச் அமெரிக்க ஓபன் பட்டத்தை 3 முறை (2011, 2015, 2018) வென்றுள்ளார். தற்போது 4-வது முறையாக பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார்.

ஜோகோவிச்சுக்கு மெட்வதேவ் (ரஷியா), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி) போன்ற வீரர்கள் சவால் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகளான செரீனா, வீனஸ் ஆகியோர் காயத்தால் விளையாடவில்லை. செரீனா வில்லியம்ஸ் 23 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று உலகளவில் 2-வது இடத்தில் உள்ளார்.

முதல் நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா) 2-வது இடத்தில் உள்ள சபலென்கா (ரஷியா), ஒசாகா (ஜப்பான்), பிளிஸ்கோவா (செக் குடியரசு) ஆகியோர் இடையே பட்டம் பெற கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News