செய்திகள்
அஸ்வின் - விராட் கோலி

3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? விராட் கோலி பதில்

Published On 2021-08-25 07:13 GMT   |   Update On 2021-08-25 07:58 GMT
முகமது சிராஜ் திறமையான பந்து வீச்சாளர் எனவும் ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது எனவும் விராட் கோலி கூறியுள்ளார்.

லீட்ஸ்:

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

5 போட்டி கொண்ட தொடரில் இதுவரை நடந்த 2 டெஸ்ட் முடிவின்படி இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 2-வது டெஸ்டில் இந்தியா 151 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த டெஸ்டில் வெற்றி பெற்று இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் வேட்கையில் இருக்கிறது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் சென்னையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீரரான அஸ்வின் சேர்க்கப்படவில்லை. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருந்ததால் இந்தியா 4 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியது. இதனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

3-வது டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று விராட் கோலியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அணி மாற்றம் செய்யப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. 2-வது டெஸ்டில் வெற்றி பெற்ற அணி சிறந்தது. வெற்றி நிறைந்த அணியை மாற்றி தொந்தரவு செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் லாட்சில் பெற்ற வெற்றி நம்ப முடியாதது. மிகவும் சிறப்பானது.

அஸ்வின் இடம் பெறுவாரா? என்பதில் எதுவும் நடக்கலாம். ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து எல்லாம் இருக்கிறது. நாங்கள் சம பலத்துடன் தான் விளையாடுவோம்.

முகமது சிராஜ் திறமையான பந்து வீச்சாளர். ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. அவர் ஒருபோதும் சவால்களில் இருந்து பின்வாங்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

Tags:    

Similar News