செய்திகள்
இந்திய மகளிர் ஆக்கி அணி

இந்திய மகளிர் ஆக்கி அணி பதக்கத்தை உறுதி செய்யுமா? அர்ஜென்டினாவுடன் இன்று மோதல்

Published On 2021-08-04 08:44 GMT   |   Update On 2021-08-04 08:44 GMT
இந்திய அணி கால் இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு நுழைந்து சாதனை படைத்தது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய மகளிர் ஆக்கி அணி தான் மோதிய முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது.

நெதர்லாந்திடம் 1-5 என்ற கோல் கணக்கிலும், ஜெர்மனியிடம் 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்திடம் 1-4 என்ற கணக்கிலும் தோற்றது.

பின்னர் இந்திய மகளிர் ஆக்கி அணி சிறப்பாக ஆடி அயர்லாந்தை 1-0 என்ற கணக்கிலும், தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. இதனால் லீக் முடிவில் 2 வெற்றி 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய அணி கால் இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக அரை இறுதிக்கு நுழைந்து சாதனை படைத்தது.

9-வது இடத்தில் உள்ள இந்திய மகளிர் ஆக்கி அணி அரை இறுதியில் அர்ஜென்டினாவை இன்று எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை தோற்கடித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா? என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ஆண்கள் ஆக்கி அணி அரைஇறுதியில் பெல்ஜியத்திடம் தோற்றது. அது மாதிரியான நிலைமை மகளிர் அணிக்கு ஏற்பட்டு விடக்கூடாது. இதனால் வீராங்கனைகள் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.

இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டு பதக்கத்தை உறுதி செய்யுமா? என்பது ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆடவர் ஆக்கி அணி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியுடன் நாளை மோதுகிறது. இந்த ஆட்டம் காலை 7 மணிக்கு நடக்கிறது.
Tags:    

Similar News