செய்திகள்
கமல்ப்ரீத் கவுர்

பெண்களுக்கான வட்டு எறிதல்: பதக்க வாய்ப்பை இழந்தார் கமல்ப்ரீத் கவுர்

Published On 2021-08-02 13:30 GMT   |   Update On 2021-08-02 13:30 GMT
பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் 6-வது இடத்தை பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் 12 வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் 8 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் எந்த வாய்ப்பில் அதிக தூரம் எறிகிறார்களோ, அந்த வாய்ப்பு அவருக்கான சிறந்த எறிதலாக எடுத்துக் கொள்ளப்படும்.

முதல் மூன்று வாய்ப்புகள் முடிவில் முதல் 8 இடங்களை பிடித்த வீராங்கனைகள் மேலும் மூன்று வாய்ப்புகள்  எறிய அனுமதிக்கப்பட்டனர். அதில் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் 63.70 மீட்டர் தூரம் எறிந்து 6-வது இடத்தை பிடித்தார். ஜெர்மனி, சீனா, பிரேசில், இத்தாலி வீராங்கனைகள் கடைசி நான்கு இடங்களை பிடித்து வெளியேறினர்.

முதல் மூன்று வாய்ப்புகளில் அமெரிக்க வீராங்கனை வலாரி அல்மான் அதிகபட்சமாக 68.98 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்து முதல் இடம் பிடித்தார். கியூபா வீராங்கனை ஒய்மே பெரேஸ் 65.72 மீட்டர் தூரம் வீசி 2-வது இடம் பிடித்தார். ஜெர்மனி வீராங்கனை கிறிஸ்டின் புடேன்ஸ் 65.34 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார்.

போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மழை பெய்ததால், 3-வது சுற்றில் இருந்து வீராங்கனைகள் வட்டை எறிவதற்கு சிரமப்பட்டனர். அவர்கள் கையில் இருந்து வட்டு வழுக்கிச் சென்றது. கடைசி மூன்று வாய்ப்புகளிலும் 8 வீராங்கனைகளும் சிறப்பாக செயல்பட திணறினர். ஆனால்  ஜெர்மனி வீராங்கனை புடேன்ஸ் மட்டும் 5-வது வாய்ப்பில் 66.86 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்தார்.

ஆறு வாய்ப்புகள் முடிவில்,  அமெரிக்க வீராங்கனை வலாரி அல்மான் தனது முதல் வாய்ப்பில் வீசிய 68.98 மீட்டர் தூரம் அதிகபட்ச தூரமாக இருந்தது. அதனால் அமெரிக்கா வீராங்கனை முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.  ஜெர்மனி வீராங்கனை புடேன்ஸ் 5-வது வாய்ப்பில் 66.86 மீட்டர் தூரம் வீசியது 2-வது அதிகபட்ச தூரமாக இருந்தது. இதனால் வெள்ளிப் பதக்கம் வென்றார். கியூபா வீராங்கனை முதல் வாய்ப்பில் 65.72 மீட்டர் தூரம் வீசியது 3-வது அதிகபட்சமாக இருந்தது. இதனால் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இந்திய வீராங்கனை 63.70 மீட்டர் தூரம் வீசி 6-வது இடத்திற்கு பின்தங்கினார்.
Tags:    

Similar News