செய்திகள்
டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீரர்கள்-வீராங்கனைகள் விவரம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்த கொள்ள இருக்கும் இந்திய மல்யுத்த வீரர்கள்-வீராங்கனைகள் 7 பேரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்கான இந்திய மல்யுத்த அணியில் இடம்பெற்றுள்ள வீரர் வீராங்கனைகள் குறித்த தகவல்களை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
ரவி குமார் தஹியா
அரியானா மாநிலத்தை சேர்ந்த ரவி குமார் தஹியா 1997 ஆம் ஆண்டு பிறந்தார். ரவி குமார் தஹியா ஃப்ரிஸ்டைல் வெஸ்லிங் விளையாட்டில் 57 கிலோ எடைப்பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல்முறையாக பங்கேற்கிறார். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஜூனியர் வெஸ்லிங் போட்டியின் 57 கிலோ பிரிவில் ரவி குமார் தஹியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ரவி குமார் தஹியா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்
பஜ்ரங் புனியா
அரியானா மாநிலத்தை சேர்ந்த பஜ்ரங் புனியா 1994 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி பிறந்தார். இவர் தேசிய அளவிலான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 6 தங்கம் உள்பட 17 பதக்கங்கள் வென்றுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிப்போட்டிகளில் பங்கேற்கவில்லை. தீவிர பயிற்சி மேற்கொண்டுவந்த பஜ்ரங் புனியா தற்போது டோக்கியோவில் நடைபெற உள்ள வெஸ்லிங் போட்டியில் 65 கிலோ பிரிவில் தகுதி பெற்றுள்ளார்.
தீபக் புனியா
அரியானா மாநிலத்தை சேர்ந்த தீபக் புனியா 1999-ம் ஆண்டு பிறந்தார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் 86 கிலோ வெஸ்லிங் பிரிவில் பங்கேற்கிறார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக வெஸ்லிங் போட்டியின் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
சீமா பிஸ்லா
அரியானா மாநிலத்தை சேர்ந்த சீமா பிஸ்லா 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி பிறந்தார். கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற 2021 ஆசியன் சாம்பியன்ஷிப் வெஸ்லிங் போட்டியில் சீமா பிஸ்லா வெண்கல பதக்கம் வென்றார். தற்போது இவர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் வெஸ்லிங் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்கிறார்.
வினீஷ் போகட்
வினீஷ் போகட் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி அரியானா மாநிலத்தில் பிறந்தார். 26 வயதான வினீஷ் போகட் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் பெண்கள் ஃப்ரிஸ்டைல் பிரிவில் வினீஷ் போகட் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். வினீஷ் போகட் தற்போது டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கிறார்.
அனூஷ் மாலிக்
அனூஷ் மாலிக் 2001 ஆகஸ்ட் 5-ம் தேதி அரியானா மாநிலத்தில் பிறந்தார். இவருக்கு தற்போது 19 வயதாகுகிறது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக இண்டிவிஜுவல் வெஸ்லிங் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் அனூஷ் மாலி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு 59 கிலோ எடைப்பிரிவில் ஆசியன் ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் அனூஷ் மாலிக் 57 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கிறார்.
சோனம் மாலிக்
சோனம் மாலிக் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பிறந்தார். 19 வயதான சோனம் மாலிக் டோக்கியோ ஒலிம்பிக் வெஸ்லிங் போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கிறார். 2016 ஆம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கை சோனம் மாலிக் இரண்டு முறை வீழ்த்தியுள்ளார். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பள்ளிகள் அளவிலான தேசிய பள்ளிகள் விளையாட்டு வெஸ்லிங் போட்டியில் சோனம் மாலி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.