செய்திகள்
தமிழக தடகள வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை- முக ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக உள்ளன. இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ள 26 இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் குறித்த அறிவிப்பை இந்திய தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
அதில் தமிழகத்தைச் சேர்ந்த ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர் ஆகிய 3 தடகள வீராங்கனைகள் மற்றும் ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி ஆகிய 2 தடகள வீரர்கள் என மொத்தம் 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தற்போது பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டு தடகள வீரர், வீராங்கனைகள் 5 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக, ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தேர்வான தமிழக வீரர்கள் 7 பேருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.