செய்திகள்
டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய தடகள அணியில் 2 தமிழக வீரர்கள், 3 வீராங்கனைகள்
இந்திய தடகள அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.
ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக 26 போ் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதில் தனிநபா் தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 போ், ஆண்களுக்கான 4x 400 மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கும் 5 போ், கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டத்தில் 2 வீரர்கள், 3 வீராங்கனைகள் ஆகியோர் உள்ளனர்.
காயம் காரணமாக கர்நாடகத்தின் பூவம்மா, கலப்பு 4x400மீ தொடர் ஓட்டத்தில் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலட்சுமி சேகர், ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று வீராங்கனைகளும் கலப்பு 4x400 மீ தொடர் ஓட்டத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீரர்களான ஆரோக்ய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகிய இருவரும் 4x400 மீ தொடர் ஓட்டத்துக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர்.