செய்திகள்
மதுரை தடகள வீராங்கனை ரேவதி

இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை பெற்றுத்தருவதே எனது குறிக்கோள்- மதுரை தடகள வீராங்கனை ரேவதி

Published On 2021-07-06 14:20 IST   |   Update On 2021-07-06 14:20:00 IST
தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த வீராங்கனை ரேவதி தேர்வு பெற்று உள்ளார்.
மதுரை:

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை சர்வதேச ஒலிம்பிக் போட்டி நடக்கிறது.

இதில் தடகள போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க மதுரை சக்கிமங்கலத்தை சேர்ந்த வீராங்கனை ரேவதி (வயது 22) தேர்வு பெற்று உள்ளார்.

இதற்காக அவர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் பயிற்சி பெற்று வருகிறார். ரேவதி கூறியதாவது:-

எனக்கு மதுரை சக்கிமங்கலம், சொந்த ஊர். நான் 4-ம் வகுப்பு படிக்கும்போது தந்தை இறந்து விட்டார். 5-ம் வகுப்பு படிக்கும்போது தாயை பறி கொடுத்தேன். நானும், தங்கையும் பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்தோம்.

நான் 2-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு விடுதி மற்றும் பள்ளிக்கூடத்தில் தங்கி படித்தேன். 12-ம் வகுப்பு படிக்கும்போது மண்டல அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டேன்.

அப்போது நான் காலில் ஷூ இல்லாமல் ஓடுவதை பார்த்து பயிற்சியாளர் கண்ணன் எனக்கு விளையாட்டு உபகரண பொருட்கள் வாங்கி கொடுத்தார். நான் பள்ளி படிப்பை முடித்த பிறகு சக்கிமங்கலத்தில் உள்ள பைக் மெக்கானிக் கடையில் வேலை பார்த்தேன்.

அப்போது பயிற்சியாளர் கண்ணன் என்னை சந்தித்து “உனக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் இடம் வாங்கி தருகிறேன். படிப்பு கட்டணம், தங்குமிடத்துக்காக நீ பணம் எதுவும் கட்ட தேவையில்லை” என்று தெரிவித்தார்.

இதையடுத்து நான் அந்த கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாமாண்டு சேர்ந்தேன். அப்போது எனக்கு இளைப்பு நோய் ஏற்பட்டது. இதன் காரணமாக நான் மிகவும் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டேன். கல்லூரியில் முதலாமாண்டு படிப்பை கைவிட வேண்டி இருந்தது.



நான் மீண்டும் சக்கிமங்கலம் வீட்டுக்கு வந்து, பைக் மெக்கானிக் கடையில் மறுபடியும் வேலை பார்க்க தொடங்கினேன். அப்போது கண்ணன் என்னை மீண்டும் சந்தித்து கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்க உதவினார்.

நான் மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பல்வேறு விருதுகள், பதக்கங்களை பெற்றுள்ளேன். எனக்கு தென்னக ரெயில்வேயில் வேலை கிடைத்தது. இதன் மூலம் பாட்டி மற்றும் தங்கையை பராமரித்து வருகிறேன்.

ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது என் கனவாக உள்ளது. இதற்காக பாட்டியாலா முகாமில் தீவிர பயிற்சி எடுத்து வருகிறேன்.

ஜப்பான் ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை பெற்றுத்தருவதே என் குறிக்கோள்.


Similar News