செய்திகள்
ஷாகிப் அல் ஹசன், முஸ்டாபிஜூர் ரஹ்மான்

ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க ஷாகிப் அல் ஹசன், முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு அனுமதி மறுப்பு

Published On 2021-05-31 17:07 GMT   |   Update On 2021-05-31 17:36 GMT
ஐபிஎல் 2-ம் பகுதியில் பங்கேற்க வங்கதேச வீரர்கள் ஷாகிப் அல் ஹசன், முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு தடையில்லாச் சான்றிதழ் மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற 2021 ஐபிஎல் சீசன் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பாதியிலேயே தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர்- அக்டோபர் மாதத்தில் மீதமுள்ள ஆட்டங்களை நடத்த பிசிசிஐ சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் ஷாகிப் அல் ஹசன் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் முஸ்டாபிஜூர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்க தடையில்லாச் சான்றிதழ் வழங்க முடியாது என வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து  வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜ்முல் ஹசன் கூறியதாவது:-

சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் இருப்பதால் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு இருவருக்கும் தடையில்லாச் சான்றிதழ் வழங்குவது சாத்தியமற்றது. அதற்கான வாய்ப்புகளே இல்லை. டி20 உலகக் கோப்பை வருவதால், ஒவ்வொரு ஆட்டமும் முக்கியமானது.


மீதமுள்ள ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ள அதே காலகட்டத்தில் வங்கதேச அணி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்கிறது. முன்னதாக, ஐபிஎல் 2-ம் பகுதியில் பங்கேற்க இங்கிலாந்து வீரர்களை அனுமதிக்க முடியாது என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும் தெரிவித்தது.

இவ்வாறு நஜ்முல் ஹசன் தெரிவித்துள்ளார்.


ஆஸ்திரேலிய வீரர்கள் ஐபிஎல் 2-ம் பகுதியில் பங்கேற்பது குறித்து வீரர்களுடன் தற்போதைக்குப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News