செய்திகள்
கெய்ல், சுனில் நரேன், பொல்லார்ட், பிராவோ

ஐ.பி.எல்.லில் கெய்ல், பிராவோ, பொல்லார்ட் பங்கேற்பதில் சிக்கல்

Published On 2021-05-31 04:39 GMT   |   Update On 2021-05-31 04:39 GMT
ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று திட்டமிடப்பட்டுள்ளது.

மும்பை:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஐ.பி.எல். போட்டியை கால வரையின்றி தள்ளி வைக்க வேண்டிய கட்டாயம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு (பி.சி.சி.ஐ.) ஏற்பட்டது.

29 ஆட்டங்கள் முடிந்த நிலையில் எஞ்சிய 31 ஆட்டங்களை நடத்திவிட வேண்டும் என்பதில் பி.சி.சி.ஐ. தீவிரமாக உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பு இந்த போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து உள்ளது.

அதன்படி ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 18-ந் தேதி முதல் அக்டோபர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று திட்டமிடப்பட்டுள்ளது. போட்டி அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படுகிறது.

இந்தநிலையில் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்கள் நடைபெறும் தினத்தில் வெஸ்ட் இண்டீசின் கரிபீயன் பிரிமியர் ‘லீக்’ போட்டி (சி.பி.எல்.) நடைபெறுகிறது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் பங்கேற்பத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கரிபீயன் ‘லீக்’ போட்டி ஆகஸ்டு 28-ந் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 19-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாடி விட்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐ.பி.எல். கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இணைய வேண்டும். இதனால் ஒரு சில ஆட்டங்களை விளையாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

இதன் காரணமாக கரிபீயன் பிரிமியர் ‘லீக்’ போட்டியை முன்கூட்டியே தொடங்க கோரி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பி.சி.சி.ஐ. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. நிர்வாகி ஒருவர் கூறும்போது, “வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கரீபியன் ‘லீக்’ போட்டியை முன்கூட்டியே முடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

அப்படி முன்கூட்டியே முடிக்கும் பட்சத்தில் வீரர்கள் பாதுகாப்பு வளையத்தில் இருந்து ஐ.பி.எல். கொரோனா பாதுகாப்பு வளையத்துக்கு மாற உதவும். 3 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் காலமும் முன்கூட்டியே நிறைவடையும்” என்றார்.

இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த முக்கிய வீரர்கள் சிலர் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களின் சில போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும்.

பிராவோ(சென்னை சூப்பர் கிங்ஸ்), பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்), கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன் (பஞ்சாப் கிங்ஸ்), ஹெட்மயர் (டெல்லி கேபிட்டல்ஸ்), ஜேசன் ஹோல்டர் (சன் ரைசஸ் ஐதராபாத்), சுனில் நரீன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) உள்ளிட்டவர்களால் முதல் சில ஆட்டங்களில் விளையாட முடியாது.

இதேபோல கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் கரிபீயன் ‘லீக்’கில் விளையாடும் டிரினிடாட் மற்றும் டொபோகோ அணியின் பயிற்சியாளராக உள்ளார். 

Tags:    

Similar News