செய்திகள்
விராட் கோலி

முன்னாள் ஆல்ரவுண்டரின் தாயாரின் சிகிச்சைக்கு ரூ.6.77 லட்சம் வழங்கி உதவிய விராட் கோலி

Published On 2021-05-20 08:57 GMT   |   Update On 2021-05-20 14:38 GMT
கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து கொரோனா நிவாரண நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீராங்கனை ஒருவரின் தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக 6.77 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளார். 

முன்னாள் ஆல்ரவுண்டரான ஸ்ரவந்தி நாயுடுவின் தாயாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுபற்றி பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ஸ்ரவந்தி நாயுடு தன் தாயாரின் சிகிச்சைக்காக 16 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், தற்போது மருத்துவ செலவுக்கு மேலும் நிதி தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார். இதனை அறிந்த விராட் கோலி, உடனடியாக முன்வந்து, 6.77 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். 

சரியான நேரத்திற்கு உதவி செய்த விராட் கோலியை பிசிசிஐ முன்னாள் கன்வீனர் வித்யா யாதவ் பாராட்டி உள்ளார். மேலும், உதவி கேட்டு விராட் கோலி மற்றும் ஹனுமா விகாரி ஆகியோரை டேக் செய்த பயிற்சியாளர் ஸ்ரீதருக்கும் நன்றி தெரிவித்தார்.

கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் இணைந்து கொரோனா நிவாரண நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்கான திட்டத்தை கோலி தொடங்கிவைத்து தங்களது பங்களிப்பாக ரூ.2 கோடியை வழங்கினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை ரூ.11 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டி உள்ளார்.
Tags:    

Similar News