செய்திகள்
டோனி - விராட் கோலி

நம்பர் 1-க்கு மல்லுக்கட்டும் சிஎஸ்கே- ஆர்சிபி

Published On 2021-04-25 03:26 GMT   |   Update On 2021-04-25 03:26 GMT
காட்டில் யானையும்- சிங்கமும் மோதினால், அப்படித்தான் வான்கடேயில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் போட்டியும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் நான்கு போட்டிகளையும் வான்கடே மைதானத்திலேயே விளையாடி ஐந்தாவது போட்டியில் விளையாட இருக்கிறது. முதல் போட்டியில் மட்டுமே 188 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 

அதன்பின் சூப்பராக விளையாடி ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. குறிப்பாக கடந்த போட்டியில் கொல்கத்தாவிற்கு எதிராக பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டு துறையிலும் அசத்தியது. முதல் மூன்று போட்டிகளில் சொதப்பிய ருத்துராஜை அணியில் ஏன் வைத்திருக்கிறார்கள் என ரசிகர்கள் முணுமுணுக்க... கொல்கத்தாவிற்கு எதிராக ஆக்ரோஷமாகி 42 பந்தில் 64 ரன்கள் எடுத்து தனது திறமையை நிரூபித்தார்.

வெளியில் ஆயிரம் சொல்லலாம்... அவர் மீது நம்பிக்கை இருக்கிறது என தலைமை கோச் ஸ்டீபன் பிளமிங் கூறியதை உண்மையாக்கினார் ருத்துராஜ். டு பிளிஸ்சிஸ் தனது டாப் ஃபார்ம்-ஐ பயன்படுத்தி 95 ரன்கள் விளாசினார். இதனால் ஓபனிங் செட்டாகி விட்டது.

மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் 7 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதற்கு வஞ்சமில்லாமல் விளையாடுகிறார். களம் இறங்கினாலே குறைந்த பந்தில் அதிக ரன்கள் கேரண்டி. எம்எஸ் டோனி கடைசி நான்கு ஓவர்களை டார்கெட் செய்கிறார். அதில் க்ளிக் ஆனால் வாணவேடிக்கையை பார்க்கலாம். முதல் போட்டியில் அரைசதம் அடித்த பிறகு ரெய்னாவுக்கு இன்னும் சரியாக க்ளிக் ஆகவில்லை. அதேபோல் அம்பதி ராயுடுவுக்கும். ஓபனிங் அசத்த ரெய்னா, அம்பதி ராயுடுவுக்கு க்ளிக் ஆனால், சிஎஸ்கே கில்லி போன்று அசத்தும்.

பந்து வீச்சில் தீபக் சாஹர் பஞ்சாப் கிங்ஸ் (4 விக்கெட்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4) ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக மட்டுமே விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஆனால் விக்கெட் வீழ்த்தி இரணடு போட்டியிலும் பவர்பிளேயிலேயே சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்து விட்டார்.

சுட்டிப்பையன் சாம் கர்ரன் அவ்வப்போது முக்கியமான விக்கெட்களை வீழ்த்தினாலும் ரன்கள் கொஞ்சம் அதிகமாக  விட்டுக்கொடுக்கிறார். இதை சரி செய்தால் அவர் பெர்பெக்ட் பாஸ்ட் பவுலர். கடந்த போட்டியில் பிராவோவிற்கு ஓய்வு கொடுத்து அதிவேக பந்து வீச்சாளரான லுங்கி நிகிடியை களம் இறக்கினார் தல டோனி. அவர் 3 விக்கெட் வீழ்த்தி அணிக்கு உதவிகரமான இருந்தார்.

ஷர்துல் தாகூர் இன்னும் முழுமையாக ஆட்டத்திற்குள் வரவில்லை. ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே மொயீன் அலி (3), ஜடேஜா (2) சுழற்பந்து வீச்சில் அசத்தினர். இவர்கள் மிடில் ஆர்டர் ஓவரில் விக்கெட் வீழ்த்தினால் அது அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

ஆர்சிபி இந்த முறை சரியான கலவையாக உள்ளது. மிகவும் மந்தமான சென்னை சேப்பாக்கம் ஆடுகளங்களில் மூன்று போட்டிகளில் விளையாடி மூன்றையும் வென்றுள்ளது. மேக்ஸ்வெல் மிடில் ஆர்டரில் இணைந்திருப்பது அந்த அணிக்கு யானைப்பலத்தை கொடுத்துள்ளது. மிகவும் மந்தமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் 39, 59, 78 என முத்திரை பதித்துள்ளார். அதேபோல் 360 டிகிரி ஏபிடி வில்லியர்ஸ் 48, 76 என அசத்தியுள்ளார்.

விராட் கோலி 33, 33, 5 என ஜொலிக்காத நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக வீறுகொண்டு எழுந்து 47 பந்தில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் விளாசினா். அதேபோல் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட தேவ்தத் படிக்கல் சென்னையில் 11, 25 என ஏமாற்றம் அடைந்த நிலையில் வான்கடேயில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார். 

இதனால் ஆர்சிபி பேட்டிங்கில் படிக்கல், கோலி, மேக்ஸ்வெல், ஏபிடி என நான்கு தூண்களை வைத்துள்ளது. 

யாரும் எதிர்பார்க்காத வகையில் பந்து வீச்சும் அந்த அணிக்கு கைக்கொடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்திய பந்து வீச்சாளர்களான ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், நியூசிலாந்தின் ஜேமிசன் ஆகியோர்தான். 15 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ஜேமிசன், தனது உயரத்தை சாதகமாக எடுத்துக் கொண்டு பவுன்சர், யார்க்கர், ஸ்லோவர் ஒன் என அசத்துகிறார்.

மும்பைக்கு எதிராக 28 ரன் 2 விக்கெட், ஐதராபாத்துக்கு எதிராக 30 ரன் 1 விக்கெட், கொல்கத்தாவிற்கு எதிராக 41 ரன் 3 விக்கெட், ராஜஸ்தானுக்கு எதிராக 28 ரன் 1 விக்கெட் என ஒவ்வொரு போட்டியிலும் வாங்கிய துட்டுக்கு வஞ்சகமில்லாமல் பந்து வீசி வருகிறார். இவரிடம் பேட்டிங்கும் இருப்பது கூடுதல் பலம்.

ஹர்ஷல் பட்டேல் 5, 2, 2, 3 என அசத்தியுள்ளார். பவுன்சர், ஸ்லோவர் ஒன், யார்க்கர் என பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார். வான்கடேயில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிராக 3 விக்கெட் வீழ்த்தினாலும் 47 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்த போட்டியில் அதை சரி செய்து கொள்ள முயற்சிப்பார். முகமது சிராஜ்-ஐ புதுபந்தில் பயன்படுத்துகிறது ஆர்சிபி. விக்கெட் அதிக அளவில் சாய்க்காவிட்டாலும் ரன்கள் விட்டுக்கொடுக்க மறுக்கிறார். வேகப்பந்து வீச்சில் இந்த மூன்று பேருடன் தற்போது கேன் ரிச்சர்ட்சன் இணைந்துள்ளார்.

சுழற்பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர், சாஹல் உள்ளனர். இவர்கள் மிடில் ஆர்டரில் விக்கெட் வீழ்த்திவிட்டால் ஆர்சிபி கை ஓங்கும்.

போட்டி பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதனால் பனிப்பொழிவு குறித்து கவலை இல்லை. மும்பை வான்கடே மைதானம் பேட்டிங்கிற்கு சொர்க்கமாக விளங்கும். இருந்தாலும் புதுப்பந்தில் ஸ்விங் இருக்கும். இதை சிஎஸ்கே-யின் தீபக் சாஹர், சாம் கர்ரன் ஆர்சிபியின் முகமது சிராஜ், ஜேமிசன் எப்படி சாதகமாக பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.

டாஸ் ஜெயிப்பது என்றாலோ விராட் கோலிக்கு அலர்ஜியாகும்.  ஆனால் அந்த முறை டாஸும் ஆர்சிபிக்கு கைக்கொடுத்துள்ளது. நான்கு போட்டியில் 3 முறை விராட் கோலி டாஸ் வென்றதும் அந்த அணிக்கு அதிர்ஷ்டமே. 

அதிர்ஷ்டத்தில் டோனி குறைந்தவர் இல்லை. ஆனால் இந்த முறை நான்கில் ஒருமுறைதான் டாஸ்சில் வென்றுள்ளார். இருந்தாலும் போட்டியிலும் வென்றுள்ளார். டாஸ் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்யும்.

முதலில் பேட்டிங் செய்யும் அணி எளிதாக 180 முதல் 200 ரன்கள் வரை அடிக்கும். 200 ரன்கள் வரை சேஸிங் செய்யவும் வாய்ப்புள்ளது. பந்து வீச்சாளர்கள் திண்டாட வேண்டியதுதான். இந்த போட்டி காட்டில் யானையும், சிங்கமும் மோதுவதுபோல். யார் சின்ன தவறு செய்கிறார்களோ, அவர்கள் தோல்வியை சந்திப்பார்கள்.

மொத்தத்தில் வான்கடேயில் சிக்சர் வாணவேடிக்கை.....
Tags:    

Similar News