செய்திகள்
விராட் கோலி

ஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்பு: கேப்டன் விராட் கோலி பதில்

Published On 2021-04-23 09:50 GMT   |   Update On 2021-04-23 09:50 GMT
ஐபிஎல் 2021 சீசனில் இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்சிபி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், ரசிகர்கள் இந்த முறை எப்படியும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த சீசனில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி நான்கிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த முறை பொதுவான ஆடுகளத்தில் விளையாடுவதாலும், ஆர்சிபி அணியின் கலவை சிறப்பாக அமைந்துள்ளதாலும் இந்த வெற்றியை ருசித்துள்ளது.

விராட் கோலி, டி வில்லியர்ஸ் ஆகியோரை ஆட்டமிழக்க செய்தால், ஆர்சிபி அணியை வீழ்த்தி விடலாம் என்ற கணிப்பு தற்போது செல்லுபடியாகவில்லை. மேக்ஸ்வெல் அந்த அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளார். தேவ்தத் படிக்கல்லும் நன்றாக விளையாடி வருகிறார்.

பந்து வீச்சில் ஜேமிசன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். இதனால் இரண்டு துறையிலும் அசத்தி வருகிறது.

நேற்று மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான 178 ரன் இலக்கை விக்கெட் இழக்காமல் சேஸிங் செய்தது. இதனால் புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த முறை எப்படியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிடுவிடும் என ஆர்சிபி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இதுகுறித்து விராட் கோலியிடம் நேற்று போட்டி முடிந்த பிறகு கேள்வி எழுப்பப்பட்டது.



அப்போது விராட் கோலி கூறுகையில் ‘‘ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்புடன் இருக்க வேண்டாம் என நான் கூறுவேன். நாங்கள் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள். அந்த நேரத்தில் ஒரு போட்டி குறித்துதான் கருத்தில் கொள்வோம். இது சிறந்த தொடக்கம்தான். ஆனால், நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது’’ என்றார்.
Tags:    

Similar News