செய்திகள்
பிரித்வி ஷா

தோனி, விராட் கோலி சாதனையை முறியடித்த பிரித்வி ஷா

Published On 2021-03-09 21:30 GMT   |   Update On 2021-03-09 21:30 GMT
விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதியில் மும்பை அணியில் அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 123 பந்துகளில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
விஜய் ஹசாரே டிராபியில் நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் மும்பை - சவுராஷ்டிரா அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த சவுராஷ்டிரா அணி சமர்த் வியாஸ் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் அடிக்க 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 285 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணியின் பிரித்வி ஷா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். பிரித்வி ஷா, ஜெய்ஸ்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது.

இறுதியில், மும்பை அணி 41.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை அணியில் இடம் பெற்ற பிரித்வி ஷா அதிரடியாக ஆடி 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி 183 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது சாதனையாக இருந்தது.

இதன்பின், கடந்த 2012-ம் ஆண்டில் டாக்காவில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற விராட் கோலி உதவினார்.

இதேபோல், தோனி மற்றும் விராட் கோலி சாதனையை பிரித்வி ஷா முறியடித்து விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணி அரையிறுதி செல்ல வழிநடத்தி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News