செய்திகள்
மனு பாக்கர்

டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனை

Published On 2021-02-20 19:14 GMT   |   Update On 2021-02-20 19:14 GMT
துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர் டெல்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
புதுடெல்லி:

காமன்வெல்த் விளையாட்டு மற்றும் இளைஞர் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற பிஸ்டல் துப்பாக்கி சுடும் வீரர்  19 வயதான மனுபாக்கர். டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வாய்ப்புள்ளவர்.

போபாலில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க மனு பாக்கர் துப்பாக்கி, தோட்டாக்கள் ஆகியவற்றைப் பையில் எடுத்துக்கொண்டு டெல்லி விமான நிலையத்துக்குச் சென்றார்.

துப்பாக்கி கொண்டு செல்ல அனுமதி பெற்றுள்ளாரா என கேட்டு ஏர் இந்தியா அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர். அனுமதி பெற்றுள்ளதாக மனு பாக்கர் தெரிவித்தும் அவரை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை.

இதனால் பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும் தகவல் தெரிவித்து முறையிட்டார். மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தலையீட்டை அடுத்து போபாலுக்கு விமானத்தில் செல்ல மனு பாக்கர் அனுமதிக்கப்பட்டார்.

தன்னை துன்புறுத்திய அவமதித்த இரண்டு ஏர் இந்திய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு பாக்கர் கோரியுள்ளார்.

மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு உடனடி தலையீட்டிற்கு நன்றி தெரிவித்த அவர், டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். அதிகாரிகள் சிறிய மரியாதை கொடுக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஒவ்வொரு முறையும் வீரர்களை அவமதிக்க வேண்டாம், தயவுசெய்து பணம் கேட்க வேண்டாம் என தெரிவித்தார்.

ஏர் இந்தியாவும் தனது ஊழியர்களின் நடத்தைக்கு மன்னிப்பு கோரியது.
Tags:    

Similar News