செய்திகள்
கோப்புப்படம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : முன்னணி வீரர்களை அடிலெய்டில் தனிமைப்படுத்த முடிவு

Published On 2021-01-10 08:01 IST   |   Update On 2021-01-10 08:01:00 IST
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் முன்னணி வீரர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 14 நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மெல்போர்ன்:

ஆண்டின் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடக்கிறது. போட்டியில் பங்கேற்க 1,270 வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர், உதவியாளர்கள் அடுத்த வார இறுதியில் வர உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

தங்குவதற்கு மெல்போர்னில் ஓட்டல் அறைகள் பற்றாக்குறையாக இருப்பதால் 50 பேரை அடிலெய்டில் தனிமைப்படுத்த போட்டி அமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா), ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), நட்சத்திர வீராங்கனைகள் சிமோனா ஹாலெப் (ருமேனியா), நவோமி ஒசாகா (ஜப்பான்) ஆகியோரும் அடங்குவர். உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் வீரர்கள் தங்களது அறையில் இருந்து 5 மணி நேரம் மட்டும் பயிற்சிக்காக வெளியே வர அனுமதிக்கப்படுவார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர். இவர்கள் அடிலெய்டில் வருகிற 29-ந்தேதி நடக்கும் கண்காட்சி டென்னிஸ் போட்டியிலும் விளையாட உள்ளனர்.

Similar News