செய்திகள்
பயிற்சியில் இந்திய வீரர் ரோகித் சர்மா, ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர்.

இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் சிட்னியில் இன்று தொடக்கம்

Published On 2021-01-06 19:19 GMT   |   Update On 2021-01-06 19:19 GMT
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது.
சிட்னி:

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்று தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

அடிலெய்டில் 36 ரன்னில் சுருண்டதும் இந்திய அணி இனி தேறாது என்று சவடால் விட்ட முன்னாள் வீரர்கள் பலரும் மெல்போர்னில் இந்திய அணியின் எழுச்சியை கண்டு வாயடைத்து போனார்கள். அதுவும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அவர்களது இடத்திலேயே இந்திய அணி இரு இன்னிங்சிலும் 200 ரன்னுக்குள் அடக்கியது. இதனால் இன்றைய டெஸ்டில் இந்திய வீரர்கள் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள்.

இந்த போட்டிக்கான ஆடும் லெவன் அணியை இந்திய அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதன்படி காயத்தில் இருந்து மீண்டு 14 நாள் தனிமைப்படுத்தும் நடைமுறையை கடைபிடிக்க வேண்டி இருந்ததால் முதல் இரு டெஸ்டை தவற விட்ட தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ரோகித் சர்மா இந்த தொடரில் முதல் முறையாக விளையாட உள்ளார். பார்ம் இன்றி தவிக்கும் மயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். இதே போல் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு பதிலாக அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி இடம் பிடித்துள்ளார். தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய அனுபவ வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததால் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. அவருக்கு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பக்கபலமாக இருப்பார் என்று நம்பலாம்.

மெல்போர்ன் டெஸ்டில் கேப்டன் அஜிங்யா ரஹானே சதம் விளாசி அசத்தினார். ஆனால் ‘பொறுமையின் சிகரம்’ புஜாராவின் ஆட்டம் பெரிய அளவில் எடுபடவில்லை. அவரும் ரன் குவிக்கும் போது இந்தியாவின் பேட்டிங் வரிசை பலப்படும். புஜாரா இன்னும் 97 ரன்கள் எடுத்தால் டெஸ்டில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த 6-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

2-வது டெஸ்டில் லெக்சைடில் அதிகமான பீல்டர்களை நிறுத்தி அதற்கு ஏற்ப பந்து வீசச்செய்த ரஹானேவின் வியூகத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. இதனால் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்ததுடன், ரன்ரேட்டும் மந்தமானது. இந்த டெஸ்டில் அவரது திட்டமிடல் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை உள்நாட்டில் பேட்டிங்கில் தடுமாறுவது ஆச்சரியமே. எப்போதும் ரன்மழை பொழியும் ஸ்டீவன் சுமித் முதல் இரு டெஸ்டிலும் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்ட அவர் அதற்கு பரிகாரம் தேட தீவிரம் காட்டுவார்.

காயத்தால் முதல் இரு டெஸ்டில் ஆடாத அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னரின் வருகையும் ஆஸ்திரேலியாவுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். சிட்னி அவருக்கு ராசியான மைதானமாகும். இங்கு அவர் 4 சதங்கள் அடித்துள்ளார். இடுப்பு பகுதியில் லேசான வலி இருந்தாலும் அதை சமாளித்து பேட்டிங் செய்வதற்கு அவர் தயாராகி விட்டார். அவருடன் இளம் வீரர் வில் புகோவ்ஸ்கி அறிமுக வீரராக அடியெடுத்து வைப்பார் என்று தெரிகிறது. மற்றபடி பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் வழக்கம் போல் வரிந்து கட்டுவார்கள். சிட்னி ஆடுகளம் பெரும்பாலும் சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் நாதன் லயன் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சாதனையின் விளிம்பில் உள்ள நாதன் லயன் இன்னும் 6 விக்கெட் எடுத்தால் 400 விக்கெட் என்ற இலக்கை அடைவார்.

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் நிருபர்களிடம் கூறுகையில், ‘சிட்னியில் எங்களது வெற்றியும், சாதனையும் சிறப்பாக இருக்கிறது. அத்துடன் எங்கள் அணியில் உள்ள பெரும்பாலான பந்து வீச்சாளர்களுக்கு இது அவர்களது சொந்த ஊர் மைதானம் ஆகும். அவர்கள் இங்குள்ள ஆடுகளத்தன்மையை நன்கு அறிந்தவர்கள் என்பதால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த டெஸ்டில் வார்னர் நிச்சயம் விளையாடுவார். அவர் அற்புதமான ஒரு வீரர். யாருக்கு எதிராக விளையாடினாலும் வார்னர் இருந்தால் நாங்கள் மேலும் சிறந்த அணியாக இருப்போம்’ என்றார். தொடரில் முன்னிலை பெறப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் போட்டி என்பதால் முதல் நாளில் இருந்தே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

சிட்னியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் 48 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியத்தில் தினமும் 10 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ரசிகர்கள் சமூக இடைவெளிவிட்டு அமர வேண்டும். அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆடுகளம் குறித்து அதன் பராமரிப்பாளர் ஆடம் லீவிஸ் கூறுகையில், ‘கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இடையே இங்கு நடந்த டெஸ்டுக்குரிய ஆடுகளம் போன்று இப்போதும் இருக்குமா? என்று கேட்கிறீர்கள். ஒவ்வொரு ஆண்டும் பருவநிலை வித்தியாசமாக இருக்கிறது. இந்த முறை ஆடுகளத்தை தயார்படுத்துவதில் மழை எங்களுக்கு இடையூறாக இருந்தது. கணிசமான புற்களுடன் கூடிய கடின தரை ஆடுகளத்தை கொடுக்க முயற்சித்துள்ளோம்’ என்றார். இதனால் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடலாம். முதல் இரு நாட்கள் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, ரஹானே (கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், நவ்தீப் சைனி, முகமது சிராஜ், பும்ரா.

ஆஸ்திரேலியா: வார்னர், வில் புகோவ்ஸ்கி, மார்னஸ் லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட் அல்லது டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், டிம் பெய்ன் (கேப்டன்), கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், நாதன் லயன்.

இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

ஆஸ்திரேலிய பயணம் தொடங்கியதில் இருந்தே இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கடுமையான கொரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறார்கள். கடைசி டெஸ்ட் நடக்கும் பிரிஸ்பேனில் இதைவிட கெடுபிடி அதிகமாக இருக்கும். அங்கு வீரர்கள் முற்றிலும் ஓட்டலிலேயே முடங்க வேண்டிய நிலைமை உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய வீரர்கள் பிரிஸ்பேன் செல்ல தயங்குவதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பான கேள்விகளுக்கு இந்திய பொறுப்பு கேப்டன் ரஹானே நேற்று பதில் அளித்து கூறியதாவது:-

தனிமைப்படுத்தும் நடைமுறைக்குள் இருப்பது தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய சவாலாகும். ஆனால் ஒரு அணியாக நாங்கள் டெஸ்ட் போட்டி மீதே கவனமுடன் இருக்கிறோம். எங்களை தவிர்த்து வெளியே பார்த்தால், சிட்னியில் மக்களின் வாழ்க்கை இயல்பாக இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு அணியாக நாங்கள் ஓட்டலுக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம். வீரர்கள் என்ற வகையில் இதை நாங்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். இதை பற்றி நாங்கள் புகார் செய்யப்போவதில்லை. தற்போது சிட்னி டெஸ்ட் மீதே முழு கவனமும் உள்ளது. வெளியே முற்றிலும் இயல்பான நிலை இருக்கும் போது, நாங்கள் மட்டும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருப்பது சவால் தான். இதற்காக நாங்கள் கோபப்படபோவதில்லை. நாங்கள் இங்கு வந்தது கிரிக்கெட் விளையாடுவதற்கு தான். அதை செய்யவே விரும்புகிறோம். மற்ற விஷயங்களை அணி நிர்வாகமும், இந்திய கிரிக்கெட் வாரியமும் பார்த்துக்கொள்ளும்.

இவ்வாறு ரஹானே கூறினார்.
Tags:    

Similar News