செய்திகள்
நியூசிலாந்து அணி

பாகிஸ்தானை இன்னிங்ஸ் கணக்கில் வீழ்த்தி நம்பர் ஒன் இடத்தை பிடித்து நியூசிலாந்து புதிய சாதனை

Published On 2021-01-06 09:54 GMT   |   Update On 2021-01-06 09:54 GMT
பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது நியூசிலாந்து.
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடந்தது. பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 297 ரன் எடுத்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வில்லியம்சன் இரட்டை சதமும் ( 238 ரன்), ஹென்றி நிக்கோல்ஸ் (157 ரன்), மிச்சேல் (102 ரன்) ஆகியோர் சதமும் அடித்தனர்.

362 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 8 ரன் எடுத்து இருந்தது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது.

நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் பாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிந்தன. அந்த அணி 186 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 176 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அசார் அலி அதிகபட்சமாக தலா 37 ரன் எடுத்தனர். கெய்ல் ஜேமிசன் 48 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். போல்ட் 3 விக்கெட்டும், வில்லியம்சன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் டெஸ்டில் அந்த அணி 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ஏற்கனவே 20 ஓவர் தொடரையும் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. பாகிஸ்தான் அணி 2 தொடரை இழந்து ஏமாற்றம் அடைந்தது.

இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் தர வரிசையில் நம்பர்ஒன் இடத்தை பிடித்தது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக அந்த அணி முதல் இடத்தை பிடித்தது. நியூசிலாந்து அணி 118 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன.

மேலும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் நுழையும் வாய்ப்பையும் நியூசிலாந்து பெறுகிறது.
Tags:    

Similar News