செய்திகள்
கேஎல் ராகுல்

பேட்டிங் பயிற்சியின் போது காயம் - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து கேஎல் ராகுல் விலகல்

Published On 2021-01-05 05:16 GMT   |   Update On 2021-01-05 08:27 GMT
பேட்டிங் பயிற்சியின்போது இந்திய வீரர் கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.
மெல்போர்ன்:

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டித்தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையே தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போதுவரை 2 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், மெல்போர்ன் மைதானத்தில் கடந்த 2-ம் தேதி பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய அணியின் விக்கெட் கீப்பர்\பேட்ஸ்மேனான கேஎல் ராகுலுக்கு காயம் ஏற்பட்டது. பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட போது அவரது இடது கை மணிக்கட்டில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் கையில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டுவர 3 வாரங்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.

இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகளிலும் கேஎல் ராகுல் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.   
Tags:    

Similar News