செய்திகள்
போட்டி நடைபெற உள்ள டென்னிஸ் அரங்கம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு

Published On 2020-12-17 11:01 IST   |   Update On 2020-12-17 11:01:00 IST
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன்:

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு 3 கிராண்ட்சிலாம் போட்டிகள் மட்டுமே நடந்தது.

ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் (செர்பியா), சோபியா (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர். தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட அமெரிக்க ஓபனில் டொமினிக் தீம் (ஆஸ்தீரியா), நவோமி ஒசாகா (ஜப்பான்) பிரெஞ்சு ஓபனில் ரபெல்நடால் (ஸ்பெயின்), இகா சுவாடெக் (போலந்து) சாம்பியன் பட்டம் பெற்றனர்.

பாரம்பரியம் மிக்க விம்பிள்டன் டென்னிஸ் போட்டி கொரோனா பாதிப்பால் ரத்து செய்யப்பட்டது.

அடுத்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியை மெல்போர்ன் நகரில் ஜனவரி 18-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பரவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டுக்கு செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும், அங்கு 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜனவரி 10-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை கத்தார் தலைநகர் ஜோகாவில் நடக்கிறது.

Similar News