செய்திகள்
அஞ்சு பாபி ஜார்ஜ்

ஒற்றை சிறுநீரகத்துடன் சாதனை படைத்தேன் - உலக தடகளத்தில் பதக்கம் வென்ற அஞ்சு அதிர்ச்சி தகவல்

Published On 2020-12-08 01:08 IST   |   Update On 2020-12-08 01:08:00 IST
ஒற்றை சிறுநீரகத்துடன் உலகில் உயர்ந்த நிலையை எட்டிய ஒரு சில அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவர் என உலக தடகளத்தில் பதக்கம் வென்ற அஞ்சு கூறியுள்ளார்
கொச்சி:

2003-ம் ஆண்டு பாரீஸ்சில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார். உலக தடகளத்தில் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனையான அஞ்சு 2004-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 6-வது இடம் பிடித்தார்.

ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்று இருக்கும் 43 வயதான அஞ்சு ஒற்றை சிறுநீரகத்துடன் (கிட்னி) இந்த சாதனையை படைத்துள்ளார் என்ற அதிர்ச்சிகரமான தகவலை நேற்று வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘நம்பினால் நம்புங்கள், ஒற்றை சிறுநீரகத்துடன் உலகில் உயர்ந்த நிலையை எட்டிய ஒரு சில அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவர்.

வலி நிவாரணி மருந்து கூட எனக்கு ஒத்துக்கொள்ளாது. இந்த தடைகளை எல்லாம் தாண்டி தான் தடகள போட்டியில் பங்கேற்றேன். எனது சாதனையை என்னுடைய பயிற்சியாளரின் மேஜிக் என்பதா? அல்லது திறமை என்று சொல்வதா?’ என்று குறிப்பிட்டுள்ளார். அஞ்சுவுக்கு அவரது கணவர் ராபர்ட் பாபி ஜார்ஜ் பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News