செய்திகள்
ஆஸ்திரேலியா அணி

மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது

Published On 2020-11-29 12:00 GMT   |   Update On 2020-11-29 13:54 GMT
சிட்னியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இமாலய இலக்கை எட்ட முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்ததுடன் தொடரையும் இழந்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 7 ஓவரில் 70 ரன்களும், பும்ரா 10 ஓவரில் 79 ரன்களும், முகமது ஷமி 9 ஓவரில் 73 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டீவ் ஸ்மித் 64 பந்தில் 104 ரன்களும், டேவிட் வார்னர் 83 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 60 ரன்களும், மார்னஸ் லாபஸ்சேன் 70 ரன்களும், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 29 பந்தில் 63 ரன்களும் அடித்தனர்.

பின்னர் 390 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அகர்வால் 26 பந்தில் 28 எடுத்து ஆட்டமிழந்தார். தவான் 30 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து விராட் கோலி உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி தாக்குப்பிடித்து விளையாடியது. அடித்து விளையாட நினைக்கும்போது 38 ரன்னில் வெளியேறினார் ஷ்ரேயாஸ் அய்யர்.

4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். ஆனால் 35-வது ஓவரின் 5-வது பந்தில் 89 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.


அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது, கேஎல் ராகுல் 66 பந்தில் 76 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்களும், ஜடேஜா 24 ரன்களும் அடிக்க இந்தியாவால் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களே அடித்தது.

இதனால் ஆஸ்திரேலியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
Tags:    

Similar News