செய்திகள்
ஆர்.சி.பி. வீரர்கள்

பவர்பிளே சுந்தரிடம் சரணடைந்த சிஎஸ்கே: 37 ரன்னில் ஆர்சிபி வெற்றி

Published On 2020-10-10 23:23 IST   |   Update On 2020-10-11 20:15:00 IST
பவர்பிளேயில சிறப்பாக பந்து வீசும் வாஷிங்டன் சுந்தர் டு பிளிஸ்சிஸ், வாட்சனை வெளியேற்ற, சென்னை சூப்பர் கிங்ஸ் ஆர்சிபி-யிடம் எளிதாக சரணடைந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விராட் கோலியின் (90) அதிரடியால் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் அடித்தது.

பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

முதல் ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசினார். இந்த ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 3-வது ஓவரில் வாட்சன் ஒரு பவுண்டரி அடிக்க 7 ரன்கள் கிடைத்தது.

4-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரை டார்கெட் செய்ய நினைத்தார் டு பிளிஸ்சிஸ் 4-வது மற்றும் 5-வது பந்தை தூக்கி அடிக்க நினைத்தார். பந்து மேல் நோக்கி சென்றாலும் கேட்ச் ஆகவில்லை. ஆனால் கடைசி பந்தில் டு பிளிஸ்சிஸ் மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். சென்னை 19 ரன்னுக்குள் முக்கிய விக்கெட்டை இழந்தது.

அடுத்து அம்பதி ராயுடு களம் இறங்கினார். 5-வது ஓவரை நவ்தீப் சைனி வீசினார். இந்த ஓவரில் சென்னை அணியால் 2 ரன்கள் மட்டுமே அடித்தது.

6-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வாட்சன் அடுத்த பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். வாட்சன் 18 பந்தில் 14 ரன்கள் அடித்தார். 25 ரன்னுக்குள் சென்னை முக்கிய 2 விக்கெட்டுகளை இழந்தது. அத்துடன் சென்னை அணியில் தோல்வி உறுதியானது.

அடுத்து 3-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் ஜெகதீசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. ஆனால் அதிரடியாக விளையாட முடியவில்லை. 9-வது ஓவரில் 9 ரன்களும், 10-வது ஓவரில் 3 ரன்களும் அடித்தது.

10.2 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 50 ரன்னைக் கடந்தது. 11-வது ஓவரில் 9 ரன்களும், 12-வது ஓவரில் 7 ரன்களும் கிடைத்தது.

13-வது ஓவரில் ஜெகதீசன் இரண்டு பவுண்டரிகள் அடிக்க 12 ரன்கள் கிடைத்தது. 14-வது ஓவரை ஷிவம் டுபே வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. ஆனால் நவ்தீப் சைனி வீசிய 15-வது ஓவரில் ஜெகதீசன் 33 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அடுத்து 4-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன், எம்எஸ் டோனி ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரில் 7 ரன்களே கிடைத்தது.

16-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார் எம்எஸ் டோனி. இதனால் சென்னை 15.3 ஓவரில் 100 ரன்னைத் தாண்டியது. டோனி சிக்ஸ் அடித்ததன் சந்தோசம் ரசிகர்களுக்கு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைக்க சென்னை 16 ஓவரில் 106 ரன்கள்  எடுத்திருந்தது.

17-வது ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் சாம் கர்ரன் சந்தித்த முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். அடுத்து ஜடேஜா களம் இறங்கினார். இந்த ஓவரில் கிறிஸ் மோரிஸ் 3 ரன்களே விட்டுக்கொடுத்தார்.

18-வது ஓவரை இசுரு உடானா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் அம்பதி ராயுடு ஸ்டம்பை பறிகொடுத்தார்.  அவர் 40 பந்தில் 42 ரன்கள் அடித்தார். அடுத்து வெயின் பிராவோ களம் இறங்கினார். இந்த ஓவரில் சென்னைக்கு 8 ரன்கள் கிடைத்தது.

19-வது ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசினார். இந்த ஓவரில் பிராவோ (7), ஜடேஜா (7) ஆட்டமிழந்தனர். மோரிஸ் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இசுரு உடானா கடைவி ஓவரை வீசினார். சென்னை 6 ரன்கள் அடிக்க சென்னை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்தது. இதனால் ஆர்சிபி 37 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Similar News