செய்திகள்
ராஜஸ்தான் வீரர் விக்கெட்டை வீழ்த்திய கொல்கத்தா

ஐபிஎல் 2020: ராஜஸ்தானை 37 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

Published On 2020-09-30 18:06 GMT   |   Update On 2020-09-30 18:06 GMT
ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது
துபாய்:

ஐபிஎல் கிரிக்கெட்டின் 12-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.  

அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஷுப்மான் கில், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

சுனில் நரைன் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நிதிஷ் ராணா ஷுப்மான் கில் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 
இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

10-வது ஓவரின் கடைசி பந்தில் நிதிஷ் ராணா 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்திருந்தது.

சிறப்பாக விளையாடி வந்த ஷுப்மான் கில் 34 பந்தில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அந்த்ரே ரஸல் 24 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னிலும் ஆட்டமிழக்க கொல்கத்தாவின் ரன் விகிதம் குறைய ஆரம்பித்தது.

6-வது வீரராக களம் இறங்கிய மோர்கன் 23 பந்தில் 34 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்துள்ளது. 

ஜாஃப்ரா ஆர்சர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவரில்18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர். 

7 பந்துகள் ஆடிய ஸ்மித் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்துவந்த சஞ்சு சம்சங் 9 பந்து வீச்சில் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். சற்று நிதானமாக ஆடிய பட்லர் 16 பந்தில்
21 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் வீரர்கள் அனைவரும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

இதனால், 14.4 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால், கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் அணியின் டாம் கரன் 36 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 54 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்கள் ஷிவம் மாவி, கம்லேஷ் நாகர்கோட்டி, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  

Tags:    

Similar News